அயோத்தியில் பிரச்சனைக்குரிய பகுதியில் ராமர் கோவில் கட்டப்படும் - மோகன் பகவத்


அயோத்தியில் பிரச்சனைக்குரிய பகுதியில் ராமர் கோவில் கட்டப்படும் - மோகன் பகவத்
x
தினத்தந்தி 24 Nov 2017 11:59 AM GMT (Updated: 24 Nov 2017 11:59 AM GMT)

அயோத்தியில் பிரச்சனைக்குரிய பகுதியில் ராமர் கோவில் மட்டுமே கட்டப்படும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறிஉள்ளார்.

புதுடெல்லி,

அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை அமைதியான வழியில் தீர்க்கும் முயற்சியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஈடுபட்டு உள்ளார். இப்பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யும் அவருடைய முயற்சியை இப்பிரச்சனையில் சம்பந்தப்பட்டு உள்ளவர்கள் தரப்பில் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவில் மட்டுமே கட்டப்படும், வேறு எந்தஒரு கட்டிடமும் எழுப்பப்பட முடியாது என கூறிஉள்ளார். 

“அதே கற்களாலே அங்கு ராமர் கோவிலை கட்டவேண்டும். கட்டப்படும் ராமர் கோவிலின் மேல் பகுதியில் காவி கொடி பறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை,” என கர்நாடக மாநிலம் உடுப்பில் விஎச்பி அமைப்பு தரப்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத் கூறி உள்ளார். 

 “ராமர் கோவில் கட்டப்படும். இது பிரபலமான அறிவிப்பு கிடையாது, ஆனால் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. இது மாறாது,” என கூறிஉள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது. 

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மோகன் பகவத் இவ்வாறு பேசிஉள்ளார். “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு என்பது தேவையானது, நம்முடைய இலக்கை நாம் நெருங்கி கொண்டிருக்கிறோம், இத்தருணத்தில் கூடுதல் எச்சரிக்கை அவசியமானது,” எனவும் கூறிஉள்ளார். 

மோகன் பகவத் பசுவதை தொடர்பாக பேசுகையில், “பசுவதைக்கு தடை விதிக்கப்படவில்லை என்றால் நாம் அமைதியாக இருக்க முடியாது,” எனவும் கூறிஉள்ளார். 

Next Story