தீவிரவாதி ஹபீஸ்சயீத் விடுதலை உத்தரபிரதேசத்தில் கொண்டாட்டம் போலீஸ் விசாரணை


தீவிரவாதி ஹபீஸ்சயீத் விடுதலை உத்தரபிரதேசத்தில் கொண்டாட்டம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 25 Nov 2017 6:57 AM GMT (Updated: 25 Nov 2017 6:56 AM GMT)

தீவிரவாதி ஹபீஸ்சயீத் விடுதலையை உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு நகரில் கொண்டாடப்பட்டது. இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

லக்மிபூர் கேரி

பாகிஸ்தானில் செயல்படும்  ஜமா-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ்சயீத். இவர் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு   மூளையாக  செயல்பட்டவர். இவரை சர்வதேச குற்றவாளி என கூறி இவரது தலைக்கு ரூ.6 கோடியே 50 லட்சம் பரிசு தொகையை அமெரிக்கா அறிவித்துள்ளது. இருந்தும் அவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக  செயல்பட்டார். பேரணி,  பொதுக் கூட்டம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி வந்தார்.

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்  தலைமையிலான புதிய அரசு அமைந்ததும் சயீத்தை கைது செய்ய  கடும் நெருக்கடி கொடுத்தது. அதை தொடர்ந்து  ஹபீஸ் சயீத் கைது  செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் சமீபத்தில் அவர் லாகூர் கோர்ட் மூலம் விடுதலை செய்யப்பட்டார்.  

சயீத் விடுதலையை உத்தரபிரதேசத்தில்  உள்ள  சிவ்புரி நகரில் உள்ள பேகம் பாக் காலனியில் வசிக்கும் சிலர் கொண்டாடியுள்ளனர். தங்களது வீடுகளில் பச்சை நிற கொடிகளை ஏற்றி வைத்த அவர்கள், ஹபீஸ் சயீத், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியுள்ளனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், 

பேகம் பாக் காலனியி்ல 20 - 25 இளைஞர்கள் ஹபீஸ் சயீத் விடுதலையை கொண்டாடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால், அவர்கள் இதனை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. கலெக்டரிடம் புகார் சென்ற பிறகே களத்தில் இறங்கி விசாரணை நடத்தினர். அங்கு வீடுகளில் ஏற்றப்பட்டிருந்த பச்சை நிற கொடிகளை பறிமுதல் செய்ததுடன், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.

ஹபீஸ் விடுதலைக்கு ஆதரவாக நடந்த கொண்டாட்டங்கள், மற்றும் அவருக்கு ஆதரவாக எழுப்பப்பட்ட கோஷங்கள் குறித்து வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாக சிலர் கூறியுள்ளனர்.

லகிம்பூர் பகுதி இமாம் அஷ்பாக் குதாரி கூறியதாவது:- 

தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டது குறித்து தனக்கு தெரியாது. பச்சை நிற கொடிகள் ஏற்றப்பட்டது கவலைக்குரியதாகும். டிசம்பர் 2ல் நடக்கும் ஜூலூஸ் - இ - மொகம்தி பண்டிகையை கொண்டாட சிலர் தற்போதே தயாராகி வருகின்றனர். இதற்கும் ஹபீஸ் சயீத் அல்லது பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story