தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா உள்பட 10 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள்


தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா உள்பட 10 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள்
x
தினத்தந்தி 15 Dec 2017 12:15 AM GMT (Updated: 14 Dec 2017 9:19 PM GMT)

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தமிழகம், கர்நாடகம் உள்பட 10 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படுகிறது. மார்ச் 1-ந் தேதி முதல் செயல்பட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவவிட்டுள்ளது.

புதுடெல்லி,

நமது நாட்டில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் ஆகிய மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் வழக்குகள், கோர்ட்டுகளில் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஊழல் வழக்குகளில் சிக்குகிற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயுள் கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த அஷ்வினி உபாத்யாய், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடுத்துள்ளார்.

அந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஊழல் அரசியல்வாதிகள் மீதான வழக்குகளில் விரைவான விசாரணை நடத்துவதற்கு ஒரு திட்டம் வகுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி மத்திய அரசு திட்டம் வகுத்து 14 பக்கங்களைக் கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.

அந்த பிரமாண பத்திரத்தில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கு 12 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும்.

* 12 சிறப்பு கோர்ட்டுகளில் 2 கோர்ட்டுகள், 228 எம்.பி.க்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்படும்.

* மீதி 10 சிறப்பு கோர்ட்டுகள் தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், கர்நாடகம், கேரளா, மத்திய பிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று வீதம் அமைக்கப்படும்.

இந்த மாநிலங்களில் தலா 65-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

* இந்த சிறப்பு கோர்ட்டுகள் ஓராண்டு காலத்துக்கு செயல்படும். இவற்றை அமைப்பதற்காக ரூ.7 கோடியே 80 லட்சம் ஒதுக்கப்படும்.

* நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 1,581 வழக்குகளை தனிக்கோர்ட்டுகள் ஒரே ஆண்டில் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும்.

* தனிக்கோர்ட்டுகள் அமைக்கப்படுகிற மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களில் 65-க்கும் குறைவான எம்.எல்.ஏ.க்கள் மீது மட்டுமே ஊழல் வழக்குகள் உள்ளதால், அவற்றுக்கு சிறப்பு கோர்ட்டுகள் தேவையில்லை. அவை ஏற்கனவே உள்ள விரைவு கோர்ட்டுகளில் விசாரிக்கப்படும்.

இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் நேற்று பரிசீலித்தனர். அப்போது வழக்குதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், “12 தனிக்கோர்ட்டுகள் போதாது, இன்னும் கூடுதலான தனிக்கோர்ட்டுகள் அமைக்க வேண்டும்” என்று கூறினர்.

அதற்கு நீதிபதிகள், “முதலில் 12 தனிக்கோர்ட்டுகளை தொடங்கட்டும். நாம் அதை தடுக்க வேண்டாம். இது முடிவாக அமைந்து விடாது” என கருத்து தெரிவித்தனர். அத்துடன் மத்திய அரசின் பிரமாண பத்திரத்தை ஏற்று உத்தரவு பிறப்பித்தனர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகள், எந்தெந்த வழக்குகளை தனிக்கோர்ட்டுக்கு விசாரணைக்கு அனுப்புவது என்பதை கண்டறிந்து, ஒதுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறி உள்ளனர்.

இந்த உத்தரவின்படி ஊழல் அரசியல்வாதிகள் மீதான வழக்குகள், தனிக்கோர்ட்டுகளில் வரும் மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் விசாரிக்கப்படும். அதில் இருந்து ஒரு வருடத்துக்குள் அனைத்து வழக்குகளிலும் தீர்ப்பு வந்து விடும்.

Next Story