பாராளுமன்றம் இன்று கூடுகிறது எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க பிரதமர் மோடி வேண்டுகோள்


பாராளுமன்றம் இன்று கூடுகிறது எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Dec 2017 12:53 AM GMT (Updated: 15 Dec 2017 12:52 AM GMT)

பாராளுமன்றம் இன்று கூடுகிறது எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி, 

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ஜனவரி 5–ந்தேதி வரை நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் 14 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. அதேசமயம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு, சரக்கு, சேவை வரியை அமல்படுத்தியதில் ஏற்பட்ட குறைபாடு, விவசாயிகள் பிரச்சினை, ரபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுக்க எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டுகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசு நேற்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, பாராளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாராளுமன்ற கூட்டத் தொடர் சுமுகமாகவும், ஆக்கபூர்வமாகவும் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் பாராளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நாட்டின் வளர்ச்சிக்கு அதிக ஊக்கம் அளிக்க முடியும் என்றும் அப்போது அவர் கூறினார். இந்த தகவலை கூட்டம் முடிந்ததும் பாராளுமன்ற விவகார மந்திரி அனந்தகுமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசியது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் தங்கள் கட்சி பிரச்சினை கிளப்பியதாக தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து, பாராளுமன்றத்தில் காங்கிரஸ் பிரச்சினையை கிளப்பும் என்றும், பிரதமர் வருத்தம் தெரிவிக்கும் வரை ஓயப்போவது இல்லை என்றும் அப்போது அவர் கூறினார்.முன்னதாக, பாராளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது
 

Next Story