நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை


நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 16 Dec 2017 7:19 AM GMT (Updated: 16 Dec 2017 7:19 AM GMT)

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் குப்தா, முன்னாள் ஜார்க்கண்ட் தலைமைசெயலர் ஏ.கே. பாசு உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராஷர் கடந்த 13ம் தேதி தீர்ப்பு வழங்கினார். மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிபதி தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர்களுக்கா தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

மேலும், மதுகோடாவுக்கு 25 லட்சம் ரூபாய் அபராதமும், குப்தாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும்,  ஜார்கண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ஏ.கே.பாசு, மதுகோடாவின் உதவியாளர் விஜய் ஜோஷி ஆகியோருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இரண்டு மாதங்கள் ஜாமீன் வழங்கப்படுகிறது. வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது’’ எனவும் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 

Next Story