கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேனரில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் புகைப்படம்!


கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேனரில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் புகைப்படம்!
x
தினத்தந்தி 17 Dec 2017 10:36 AM GMT (Updated: 17 Dec 2017 10:35 AM GMT)

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேனரில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் புகைப்படம் இடம்பெற்று இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் நெதுகண்டம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வைக்கப்பட்டு இருந்த பேனரில் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி சீனாவின் ஆதரவை மட்டும் கொண்டு, அமெரிக்காவிற்கு சவால் விட்டுவரும் ஜிம் ஜாங் அன்னின் புகைப்படம் இடம்பெற்று இருந்த பேனர் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் கட்சியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது, உள்ளூர் தொண்டர்கள் வைத்த இந்த பேனர் நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நெதுகண்டம் பகுதியில் நடைபெறும் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ள வைக்கப்பட்ட பேனரில் கிம் ஜாங் அன் புகைப்படம் இடம்பெற்று இருந்து உள்ளது. பேனர் உள்ளூர் கட்சி ஆதரவாளர்களால் வைக்கப்பட்டு உள்ளது, பேனரை உடனடியாக நீக்க கூறிஉள்ளோம் என மாவட்ட தலைமை கூறிஉள்ளது.

கேரளாவில் ஏற்கனவே இடதுசாரி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா தொண்டர்கள் இடையே கடுமையாக மோதல்கள் நடைபெற்று வருகிறது. இப்போது கிம் ஹாங் அன் புகைப்படம் இடம்பெற்று இருப்பதை பா.ஜனதாவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சம்பீத் பத்ரா தன்னுடைய டுவிட்டரில் இந்த புகைப்படத்தை பதிவிட்டு, கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போஸ்டரில் வடகொரியா தலைவர் ஜிம் ஜாங் அன்னிற்கு இடம் கிடைத்து உள்ளது. அவர்களுக்கு எதிரானவர்களுக்கு கேரளாவை கொலைதளமாக மாற்றுவார்கள் எந்தஒரு ஐயமும் கிடையாது. அவர்களுடைய அடுத்தக்கட்ட கொடூரமான செயல்திட்டமாக பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது ஏவுகணை வீசுவதாக இருக்காது என நம்புகிறோம் என குறிப்பிட்டு உள்ளார். 

Next Story