அரியானாவில் ‘பத்மாவத்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபுத்திர அமைப்பினர் போராட்டம்


அரியானாவில் ‘பத்மாவத்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபுத்திர அமைப்பினர்  போராட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2018 11:53 AM GMT (Updated: 20 Jan 2018 11:53 AM GMT)

அரியானாவில் ‘பத்மாவத்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபுத்திர அமைப்பினர் போராட்டம் நடத்தினர். #Padmaavat #Haryana

சண்டிகர்,

அரியானாவின் அம்பாலா பகுதியில் ராஜபுத்திர அமைப்பைச் சேர்ந்தவர்கள், பத்மாவத் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த படம் திரையிடப்படும் தியேட்டர்கள் தீயிட்டு கொளுத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

பிரபல நடிகை தீபிகா படுகோன், நடிகர்கள் ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்திப்படமான ‘பத்மாவதி’யில், ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டதாக கூறி சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் இந்த படத்தை வெளியிடுவதற்கு சில மாநிலங்கள் தடையும் விதித்தன.

எனவே படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டதுடன், படத்தின் பெயரும் ‘பத்மாவத்’ என மாற்றப்பட்டது. இந்த படத்துக்கு தணிக்கைக்குழுவினர் சான்றிதழ் வழங்கியதை தொடர்ந்து வருகிற 25-ந்தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனாலும் இந்த படம் திரையிட்டால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை எழக்கூடும் என்றுகூறி ராஜஸ்தான், குஜராத், அரியானா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் இந்த படத்துக்கு தடை விதித்தன. இது தொடர்பாக குஜராத், ராஜஸ்தான் மாநில அரசுகள் அறிவிப்பும் வெளியிட்டன.

இந்த தடையை எதிர்த்து ‘பத்மாவத்’ திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு, படத்துக்கு 4 மாநில அரசுகள் விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் பிற மாநில அரசுகள் இதுபோன்று தடை உத்தரவு பிறப்பிப்பதற்கும் தடை விதிப்பதாக கூறிய நீதிபதிகள், சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை என்று கூறி வழக்கை மார்ச் மாதத்துக்கு ஒத்தி வைத்தனர். 

இந்த நிலையில் அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் உள்ள ராஜபுத்திர அமைப்பைச்சேர்ந்தவர்கள் பத்மாவத் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த படம் திரையிடப்படும் தியேட்டர்கள் தீயிட்டு கொளுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Next Story