சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் ஒதுக்கீட்டில் வெளிப்படையான முறை? தலைமை நீதிபதி பரிசீலனை


சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் ஒதுக்கீட்டில் வெளிப்படையான முறை? தலைமை நீதிபதி பரிசீலனை
x
தினத்தந்தி 21 Jan 2018 10:30 PM GMT (Updated: 21 Jan 2018 7:53 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் ஒதுக்கீட்டில் வெளிப்படையான முறையை கொண்டு வருவது பற்றி தலைமை நீதிபதி பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #ChiefJustice

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் ஒதுக்கீட்டில் வெளிப்படையான முறையை கொண்டு வருவது பற்றி தலைமை நீதிபதி பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு

டெல்லியில் கடந்த 12-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அவர்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பற்றியும், வழக்குகள் ஒதுக்கீடு குறித்தும் குற்றம் சாட்டினர்.

இது முன் எப்போதும் நிகழ்ந்திராத அபூர்வ நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பின்னணி என்ன?

சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்ட்டர் வழக்கு, பா.ஜனதா தலைவர் அமித்ஷா மீதான கொலை வழக்கு போன்றவற்றில் விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி லோயாவின் மர்ம மரணம் தொடர்பான 2 வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மூத்த நீதிபதிகளை விட்டுவிட்டு 10-வது இடத்தில் உள்ள நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வுக்கு ஒதுக்கியதில், மூத்த நீதிபதிகள் அதிருப்தி அடைந்துதான் கொந்தளித்ததாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து அருண் மிஷ்ரா, இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகி விட்டார்.

தலைமை நீதிபதி பரிசீலனை

இந்த நிலையில், அந்த வழக்குகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வருகின்றன.

இதற்கிடையே வழக்குகள் ஒதுக்கீடு தொடர்பாக சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தந்த ஆலோசனைகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பரிசீலித்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே அவர் வழக்குகள் ஒதுக்கீட்டில் வெளிப்படையான ஒரு முறையை உருவாக்கி அறிவிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

வக்கீல்கள் சங்கத்தலைவர் கருத்து

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தலைவர் விகாஸ் சிங் கூறும்போது, “டெல்லி, மும்பை ஐகோர்ட்டுகளில் பின்பற்றுவதுபோல, சுப்ரீம் கோர்ட்டிலும் சுழற்சி முறையை (‘ரோஸ்டர் சிஸ்டம்’) கொண்டு வரலாம் என்ற கோரிக்கை உள்ளது. எங்களது கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதைத் தொடர்ந்து மூத்த நீதிபதிகளின் பத்திரிகையாளர் சந்திப்பால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டு விடும்” என்று குறிப்பிட்டார்.

வழக்குகள் ஒதுக்கீட்டில் தலைமை நீதிபதியின் முடிவை பதிவாளர் அலுவலகம் தனது இணையதளத்தில் பகிரங்கமாக பதிவேற்றம் செய்யலாம். இதனால் பல்வேறு வகையிலான வழக்குகளையும் யார், யார் விசாரிப்பார்கள் என்பதை வெளிப்படையாக பொதுவெளியில் அறிந்து கொள்கிற வாய்ப்பு உருவாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே எதிர்காலத்தில் தலைமை நீதிபதி பதவிக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ள நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி. ரமணா, யு.யு. லலித், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்து விவாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இன்று (திங்கட்கிழமை) வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பிரச்சினை எழுப்பிய மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோரை சந்தித்து பேசக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

Next Story