இந்திய ராணுவ பதிலடியில் எல்லையில் பாகிஸ்தான் நிலைகள், வெடிப்பொருள் கிடங்கு அழிப்பு


இந்திய ராணுவ பதிலடியில் எல்லையில் பாகிஸ்தான் நிலைகள், வெடிப்பொருள் கிடங்கு அழிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2018 2:36 PM GMT (Updated: 22 Jan 2018 2:36 PM GMT)

இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானின் நிலைகள் மற்றும் எரிபொருள் கிடங்கு அழிக்கப்பட்டது. #JammuAndKashmir #BSF


ஜம்மு,


காஷ்மீரில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி உள்ளது. 

கடந்த சில தினங்களாக காஷ்மீரின் எல்லையோர கிராமங்கள் மற்றும் ராணுவ சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த 5 நாட்களில் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறிய தாக்குதல்களில் பலி ஆனவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது. 60 பேர் வரையில் காயம் அடைந்து உள்ளனர். இன்றும் ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு உட்பட்ட பகர்வால், ஆர்.எஸ். புரா, அர்ணியா, ராம்கர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறிய தாக்குதலை தொடுத்தது. 

சிறிய பீரங்கிகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களை கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து நமது வீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்கபதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் மோதல் நீடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது. இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் எங்கிருந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதோ அந்த நிலைகள் அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டது என இந்திய எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 “ஜம்முவில் சர்வதேச எல்லையில் அத்துமீறி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை துல்லியமான பதிலடியை கொடுத்தது. பல்வேறு இடங்களில் எதிரியின் துப்பாக்கி சூடு நிலைப்பகுதிகள் அழிக்கப்பட்டது, எதிரி நாட்டின் வெடிமருந்து மற்றும் எரிபொருள் கிடங்கு அழிக்கப்பட்டது,” என எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் எரிபொருள் கிடங்கு சிதைக்கப்பட்டது தொடர்பான வீடியோவையும் இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் கிராம மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

Next Story