மாநில செய்திகள்
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மறைமுக பங்குதாரராக உள்ளார் ரூ.250 கோடி நிலம் தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு நகர பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் பேட்டி

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மறைமுக பங்குதாரராக உள்ளார் ரூ.250 கோடி நிலம் தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு நகர பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் பேட்டி
காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மறைமுக பங்குதாரராக உள்ள தனியார் நிறுவனத்தால் பெங்களூருவில் ரூ.250 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக நகர பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் கூறினார். பெங்களூரு நகர மாவட்ட பா.ஜனதா செய்

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மறைமுக பங்குதாரராக உள்ள தனியார் நிறுவனத்தால் பெங்களூருவில் ரூ.250 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக நகர பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் கூறினார்.

பெங்களூரு நகர மாவட்ட பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் என்.ஆர்.ரமேஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நிலத்தின் மதிப்பு ரூ.250 கோடி

பெங்களூரு பேட்ராயன்புரா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எலகங்கா பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் குடியிருப்பு கட்டிடத்தை கட்டி வருகிறது. அந்த நிறுவனம் 106 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.250 கோடி ஆகும். இதில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு தொடர்பு உள்ளது.

அந்த குடியிருப்பு கட்டிடம் அனைத்து சட்ட திட்டங்களையும் மீறி கட்டப்படுகிறது. இதுகுறித்து லோக் அயுக்தா மற்றும் பெங்களூரு மாநகராட்சி அமலாக்கப்படையில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆயினும் அங்கு 50 சதவீத கட்டுமான பணிகள் முடிந்துவிட்டன. மாவட்ட நிர்வாகம் அந்த நிலத்தை மீண்டும் நில அளவீடு செய்து அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதி விசாரணை

பினாமி சொத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வசதியாக இந்த முறைகேடு குறித்து அனைத்து ஆவணங்களும் பிரதமர் மற்றும் கவர்னரிடம் வழங்கியுள்ளோம். கோர்ட்டிலும் கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை முழுமையாக செலுத்தவில்லை. இதை மாநகராட்சி அதிகாரிகள் வசூலிக்காமல் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

அந்த நிறுவனத்தில் ராபர்ட் வதேராவும் மறைமுகமாக, அதாவது பினாமி மூலம் பங்குதாரராக உள்ளார். 106 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள அந்த நிறுவனம் இன்னும் கூடுதலாக 130 ஏக்கர் நிலத்திற்கு வேலி போட்டுள்ளது. இது குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு என்.ஆர்.ரமேஷ் கூறினார்.