மகா சிவராத்திரியையொட்டி 450 சிறப்பு பஸ்கள் இயக்கம்


மகா சிவராத்திரியையொட்டி  450 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 20 Feb 2017 7:54 PM GMT (Updated: 20 Feb 2017 7:54 PM GMT)

மகா சிவராத்திரியையொட்டி தமிழ்நாடு உள்பட பல்வேறு இடங்களுக்கு 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

பெங்களூரு,

மகா சிவராத்திரியையொட்டி தமிழ்நாடு உள்பட பல்வேறு இடங்களுக்கு 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு சிறப்பு பஸ்கள்

மகா சிவராத்திரி கொண்டாடப்படுவதையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக வருகிற 23–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மற்றும் கர்நாடகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கும் 450 சிறப்பு பஸ்களை இயக்க கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, பெங்களூரு சாந்தி நகர் பி.எம்.டி.சி. பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை, கோயம்புத்தூர் உள்பட தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும், ஆந்திரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மைசூரு ரோடு பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, உன்சூர், பிரியப்பட்டணா, விராஜ்பேட்டை, குசால்நகர் பகுதிகளுக்கும், பெங்களூரு கெம்பேகவுடா பஸ் நிலையத்தில் இருந்து தட்சிண கன்னடா, சிவமொக்கா, ஹாசன், சிக்கமகளூரு, தாவணகெரே, தார்வார், பெலகாவி, விஜயாப்புரா, யாதகிரி, பீதர் உள்பட கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், திருப்பதிக்கும் சிறப்பு பஸ்கள் செல்ல உள்ளன.

கட்டண சலுகை

சிறப்பு பஸ்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை www.ksrtc.in என்ற இணையதளம் வழியாக பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக பெங்களூருவில் 148, மைசூருவில் 18, மங்களூருவில் 34 உள்பட மாநிலம் முழுவதும் 230–க்கும் அதிகமான கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்பதிவின்போது 4 அல்லது அதற்கு அதிகமான பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுகளை ஒரே டிக்கெட்டாக பதிவு செய்தால் கட்டண தொகையில் 5 சதவீதமும், வெளியூருக்கு செல்வது மற்றும் மீண்டும் வருவதற்கு சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால் கட்டண தொகையில் 10 சதவீதமும் சலுகை அளிக்கப்பட உள்ளது. மேலும், வருகிற 26–ந் தேதி தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தின் பிற பகுதிகளில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு பஸ்கள் இயங்க உள்ளன.

மேற்கண்ட தகவல் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story