மாவட்ட செய்திகள்

தர்பாரண்யேஸ்வரசாமி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது + "||" + Brahmmotsavam tarparanyesvaracami Temple Festival

தர்பாரண்யேஸ்வரசாமி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தர்பாரண்யேஸ்வரசாமி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரசாமி கோவில் பிரம்மோற்சவ விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சப்தவிடங்க ஸ்தலங்கள் திருவாரூர், திருக்காரவாசல், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் மற்றும் திருநள்ளாறு ஆகிய 7 ஊர்கள் சப்தவிடங்க ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றது. மேற்கண்ட 7 ஊர்களிலும் உள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் பிரதான மூலவராக கிழக்கு நோக்கிய நிலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அனைத்து சிவன் கோவில்களிலும் மாதத்தில் வரும் நட்சத்திரம் மற்றும் திதியை கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் ‘பிரம்மோற்சவவிழா’ கொண்டாடப்படுவது வழக்கம்.

காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரசாமி கோவில் பிரம்மோற்சவ விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சப்தவிடங்க ஸ்தலங்கள்

திருவாரூர், திருக்காரவாசல், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் மற்றும் திருநள்ளாறு ஆகிய 7 ஊர்கள் சப்தவிடங்க ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றது. மேற்கண்ட 7 ஊர்களிலும் உள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் பிரதான மூலவராக கிழக்கு நோக்கிய நிலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அனைத்து சிவன் கோவில்களிலும் மாதத்தில் வரும் நட்சத்திரம் மற்றும் திதியை கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் ‘பிரம்மோற்சவவிழா’ கொண்டாடப்படுவது வழக்கம்.

திருநள்ளாறு தலமானது, தர்பாரண்யேஸ்வரர் என்ற சுயம்பு மூர்த்தியை மூலவராக கொண்ட கோவிலாகும். இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாக நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பிரம்மோற்சவவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வைகாசி விசாக தீர்த்தம் வரை தொடர்ந்து 18 நாட்களுக்கு இவ்விழாவானது வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்படும்.

பிரம்மோற்சவவிழா கொடியேற்றம்

அதன்படி, இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடிமரத்திற்கு விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாஜனம், பேரிபூஜைகள் செய்யப்பட்டு ரிஷப கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மேளதாள வாத்தியங்கள் முழங்க நான்கு வீதிகளிலும் ரிஷபகொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

தொடர்ந்து விசேஷமாக கணபதிதாளம், ரிஷபதாளம், சூர்ணிகை மந்திரங்களை கோவில் சிவாச்சாரியார்கள் சமர்ப்பித்தனர். தொடர்ந்து காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் ரிஷபகொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சகல விதமான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஸ்தல விருட்சமான தர்ப்பை புல்லைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து கலசபூஜை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் சொர்ணகணபதி, வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமணியர், பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரசாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கும் மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தருமை ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

18-ந்தேதி தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 11-ந் தேதி இரவு அடியார்கள் நால்வர் புஷ்பபல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 16-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சகோபுர வீதிஉலா நிகழ்ச்சியும், 18-ந் தேதி காலை தேரோட்டமும், 19-ந் தேதி இரவு சனீஸ்வரபகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளி சகோபுர வீதிஉலா நிகழ்ச்சியும், 20-ந் தேதி இரவு தெப்போற்சவமும், 21-ந் தேதி காலை விசாகதீர்த்தமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டரும், தேவஸ்தான தனிஅதிகாரியுமான சத்யேந்திரசிங் தர்சவாட், தேவஸ்தான நிர்வாக அதிகாரி பன்னீர் செல்வம், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் செய்துள்ளனர்.