மாவட்ட செய்திகள்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக அரசு அதிகாரிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக அரசு அதிகாரிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம்
புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக அரசு அதிகாரிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கருத்துக் கேட்பு கூட்டம் மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுச்சேரியை சேர்ப்பதற்காக புதுச்சேரி நகராட்சி சார்பில் திட்ட அறிக்கை

புதுச்சேரி,

புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக அரசு அதிகாரிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

கருத்துக் கேட்பு கூட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுச்சேரியை சேர்ப்பதற்காக புதுச்சேரி நகராட்சி சார்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கருத்தரங்குகள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. நகரில் முக்கிய இடங்களில் பெட்டிகள் வைத்து பொதுமக்களிடம் இருந்து கருத்துக்க்கள் சேகரிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக அரசின் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் இயக்குனர்களிடம் கருத்துக்கள் கேட்பதற்கான கூட்டம் ஆனந்தா இன் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு உள்ளாட்சித்துறை செயலாளர் ஜவகர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை இயக்குனர் முகமது மன்சூர், சிறப்பு அதிகாரி தீனதயாளன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் மற்றும் அனைத்து துறை இயக்குனர்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர். ஸ்மார்ட் சிட்டி குறித்த ஆலோசனைகளை அவர்கள் தெரிவித்தனர். இந்த கூட்டம் இன்றும் (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுச்சேரியை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்ப்பதற்காக திட்ட அறிக்கை தயாரித்து வருகிறோம். இதற்காக பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. இதில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்க்களை தெரிவித்துள்ளனர். தற்போது அனைத்து துறை அதிகாரிகளிடமும் கருத்துக்களை கேட்பதற்கான 2 நாள் பயிலரங்கம் நடந்து வருகிறது.

புதுச்சேரி நகராட்சியில் ஸ்மார்ட் சிட்டியை அமல்படுத்துவதற்காக முத்தியால்பேட்டை, புல்வர், முதலியார்பேட்டை, கொம்பாக்கம் என 4 மண்டலங்களாக பிரித்துள்ளோம். இதில் எந்த மண்டலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்தலாம் என்று மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி வருகின்றோம். இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போக்குவரத்து வசதி, தூய்மையான குடிநீர், தடையின்றி மின்சாரம், சிறந்த தொலைத்தொடர்பு வசதி உள்ளிட்ட 24 வசதிகள் செய்து தரப்பட உள்ளது. இந்த திட்டத்தினை செயல்படுத்த எந்த பகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் மக்களிடம் கருத்துக் கேட்கப்பட உள்ளது.

தற்போது அனைத்து துறை அதிகாரிகளிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான அறிக்கை தயார் செய்யப்படும். இந்த அறிக்கை புதுவை அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு, வருகிற மார்ச் மாத இறுதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு சந்திரசேகரன் கூறினார்.