அருண்ஜெட்லியுடன், நாராயணசாமி சந்திப்பு ரூ.500 கோடி கூடுதல் நிதி கேட்டார்


அருண்ஜெட்லியுடன், நாராயணசாமி சந்திப்பு ரூ.500 கோடி கூடுதல் நிதி கேட்டார்
x
தினத்தந்தி 12 Jan 2017 11:00 PM GMT (Updated: 12 Jan 2017 9:02 PM GMT)

மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்து பேசிய முதல்- அமைச்சர் நாராயணசாமி புதுவைக்கு கூடுதலாக ரூ.500 கோடி நிதி தரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

நாராயணசாமி

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டு பிரச்சினையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நேற்று டெல்லியில் இருந்த அவர்கள் காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்துப் பேசினார்கள். அப்போது புதுவை அரசியல் நிலவரம், கவர்னர் கிரண்பெடியின் செயல்பாடு குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

கூடுதலாக ரூ.500 கோடி

இந்தநிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்துப் பேசினார். அப்போது புதுவை மாநிலத்தில் நிலவும் வறட்சி, பணத்தட்டுப்பாடு குறித்து விளக்கினார். மேலும் புதுச்சேரி மாநிலத்துக்கு கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பு முடிந்ததும் அவர் நேற்று இரவு புதுச்சேரிக்கு புறப்பட்டார். மேலும் அமைச்சர்களும் டெல்லியிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வந்தனர்.


Next Story