கிழக்கு கடற்கரை வழியாக புதிதாக ரெயில் பாதை அமைக்க வேண்டும் வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்


கிழக்கு கடற்கரை வழியாக புதிதாக ரெயில் பாதை அமைக்க வேண்டும் வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 March 2017 10:30 PM GMT (Updated: 22 March 2017 9:14 PM GMT)

புதுச்சேரி–காரைக்கால், புதுச்சேரி–திண்டிவனம் இடையே கிழக்கு கடற்கரை வழியாக புதிதாக ரெயில் பாதை அமைத்து மத்திய அரசு ரெயில் விட வேண்டும் என்று வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் சிவசங்கர் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் பாலு வரவேற்று பேசினார். பொருளாளர் தங்கமணி வரவு செலவு அறிக்கை வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வணிக சம்மேளனத்தின் தேசிய சேர்மன் மகேந்திர ஷா, பொதுச்செயலாளர் பிரவின் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

புதிய ரெயில் பாதை

புதுவை அரசு நடத்த திட்டமிட்டுள்ள வணிக திருவிழாவுக்கு ஒத்துழைப்பு தருவது. அரசின் புதிய தொழிற்கொள்கைக்கு பாராட்டு தெரிவிப்பது. வணிகர்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1,600 கோடி வருமானம் கிடைக்கிறது. அதில் ஒரு சதவீதத்தை வணிகர் நல வாரியத்திற்கு அரசு வழங்கவேண்டும். சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை வழியாக புதுச்சேரி–காரைக்கால், புதுச்சேரி–திண்டிவனம் இடையே புதிதாக ரெயில் பாதை அமைத்து ரெயில்விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி–பெங்களூர், புதுச்சேரி–விழுப்புரம், புதுச்சேரி–காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

கூலி நிர்ணய சட்டம்

விரைவில் அமலுக்கு வர உள்ள சரக்கு மற்றும் சேவை வரியில் பொருட்களுக்கான வரியை மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்யும் முன்பு புதுச்சேரி அரசு வணிகர்களை அழைத்துப்பேசி ஆலோசனை செய்ய வேண்டும்.

சுமை தூக்குவோர், இறக்குவோர் கூலி நிர்ணய சட்டத்தை விரைவில் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றித்தர வேண்டும்.

அரசால் அறிவிக்கப்பட்ட ஐ.டி. பார்க் திட்டத்தை இந்த ஆண்டிலாவது ஆரம்பித்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கித்தர வேண்டும்.

புதுச்சேரி அரசினை நிதிக்கமி‌ஷனில் உறுப்பினராக சேர்க்க மத்திய அரசு ஆவண செய்யவேண்டும்.

புதுவை அரசின் கடன்தொகையை மத்திய அரசு முழுமையாக ரத்துசெய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story