மறக்க முடியாத நடிகை மனோரமா...!


மறக்க முடியாத நடிகை மனோரமா...!
x
தினத்தந்தி 26 May 2019 4:14 AM GMT (Updated: 26 May 2019 4:14 AM GMT)

இன்று (மே 26-ந் தேதி) நடிகை மனோரமா பிறந்தநாள்.

மறைந்தும் மறையாமல் நம் நினைவலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சி மனோரமாவின் பிறந்தநாளில் அவரைப்பற்றியும் அவரோடு நான் ஒன்றாக பழகிய காலங்களில் நடந்த மறக்க முடியாத சில சம்பவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1939-ல் மனோரமா திருவாரூர் மாவட்டம் ராஜமன்னார்குடியில் பிறந்தார்.. பெற்றோர் காசிகிளக்குடையார் ராமாமிர்தம்மாள். பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள். பள்ளத்தூர் பாப்பா என்றும் அழைப்பார்கள். செட்டிநாட்டுப் பள்ளத்தூரில் வளர்ந்ததால் ‘ஆச்சி’ என்று அன்பு அடைமொழி சேர்ந்து கொண்டது.

‘யார் மகன்’ நாடகம்தான், மனோரமா நடித்த முதல் நாடகம் , அறிஞர் அண்ணா எழுதிய ‘வேலைக்காரி’ நாடகத்திலும், அவரோடு ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’, ‘ஓர் இரவு’ நாடகங்களிலும் நடித்திருக்கிறார். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார்.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய ‘உதயசூரியன்’ நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும் மனோரமா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்! மனோரமா நடித்த முதல் சினிமா ‘மாலையிட்ட மங்கை’. அவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை 1,300க்கு மேல். இதனால் ‘கின்னஸ்’ உலக சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றார்.

மனோரமாவை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் கவியரசர் கண்ணதாசன்! மனோரமா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும் ஒருமுறை சொல்லிக் காட்டினாலே பேசிவிடக் கூடிய திறமைசாலி. ‘கண் திறந்தது’ படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதனோடு திருச்செந்தூர் கோவிலில் திருமணம் நடந்தது. ஒரே ஒரு மகன் பூபதி! அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ராமராவ் என ஐந்து முதல்-அமைச்சர்களோடு நடித்த பெருமை உடையவர்!

ஆச்சி மனோரமாவுடன் ஏராளமான படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறேன். அவைகளில் கலாட்டா கல்யாணம், நினைவில் நின்றவள், தேன்மழை, தேன்கிண்ணம், தர்மயுத்தம், சினிமா பைத்தியம், நல்ல பெண்மணி, இப்படியும் ஒரு பெண் போன்ற படங்கள் மறக்கவே முடியாது. இதில் பானுமதி இயக்கிய இப்படியும் ஒரு பெண் படத்தில் ஜெயிலுக்குள் இருக்கும் நானும் ஆச்சியும் சண்டை போடணும் என்று காட்சியை விளக்கமாகச் சொல்லி விட்டார்.

நிஜமாகவே மனோரமாவுக்கு என் மேல் கோபமே வரவில்லை. பானுமதியம்மாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை... “என்ன மனோரமா உங்களுக்கு போட்டியா பில்டில் காமடி நடிகையாக சச்சு வந்துகிட்டு இருக்காங்க அவங்க மேல் கோபமோ பொறாமையோ வரலையா அத மனசுல வச்சுக்கிட்டு கோபத்தைக் காட்டி சீனை கிரியேட் பண்ணுங்க’ என்றார்.

அதற்கு மனோரமா “குடும்பமா பழகிகிட்டு இருக்கோம்... சச்சு மேல பொறாமையோ... கோபமோ எனக்கு என்னிக்கும் வந்தது கிடையாது.. எனக்கு முன்னாடியிலிருந்து அவங்க நடிச்சுக்கிட்டு இருக்காங்க... வீரத்திருமகள் படத்தில் ஹீரோயினியா சச்சு நடிச்சாங்க நான் அவருக்கு தோழியா நடிச்சேன்... பெரிய ஹீரோயினியா வந்திருக்க வேண்டியவங்க... காமெடிக்கு மாறி அதிலேயும் தனி சாதனை பண்ணிக்கிட்டு வராங்க அது எனக்கு பெருமைதான் என்றார் பானுமதியம்மாவிடம். அதற்கு பிறகு அந்தக்காட்சியில் வேறு விதமாக நாங்கள் நடித்துக் கொடுத்தோம்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடிகர் திலகமே அசந்து போகும் அளவிற்கு ஜில்ஜில் ரமாமணி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். ஆச்சி நடித்ததில் எல்லோருக்கும் பிடித்த படம் ‘தில்லானா மோகனாம்பாள்’. ஆச்சிக்கே பிடித்தது ‘சின்னக் கவுண்டர்’, ‘நடிகன்’. “ஒரு துளி விரசம் இல்லாமல் ‘நடிகன்’ படத்தில் நடிச்சது எனக்குப் பெருமையான விஷயம்” என்பார்.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வேலைக்காரி கண்ணாம்மா கதாபாத்திரத்தில் ‘கம்முனு கிட’ என்ற வசனத்தின் மூலம் அந்தப் படத்திற்கு தனி வரவேற்பையே பெற்றுத்தந்தார்.

சிங்கப்பூருக்கு கலை நிகழ்ச்சிக்காக நாங்கள் சென்ற போது அங்கே கடை வீதிக்கு சென்று மேக்கப் சாதனங்களை ஒரு சைனாகாரன் கடையில் வாங்கச் சென்றோம்.. அப்போது கடைக்காரருக்கு தமிழ் தெரியாது என்று நினைத்து “சச்சு பேரம் பேசி வாங்கணும் ... இருபத்தி ஐந்து ரூபாய் பொருளை நூறு ரூபாய் என்பார்கள்... என்றதும் கடைக்காரர் மேடம் நாங்க அப்படியெல்லாம் அநியாயமாக விலை வைத்து விற்க மாட்டோம்... என்று அழகாய் தமிழில் பேசினாரே பார்க்கலாம் நாங்கள் அசந்து விட்டோம்...

அதற்குப் பிறகு அங்கே எந்தக் கடைக்கு சென்றாலும் அவரும் நானும் ஜாடையாக சிரிப்பை அடக்க முடியாமல் பணம் எவ்வளவு கொடுப்பது என்று சைகையால் பேசிக் கொள்வோம். இதை அவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம் சொல்லி சொல்லி குழந்தை போல் சிரிப்பார். சிறு வயதில் ஊரில் டூரிங் கொட்டகையில் கை முறுக்கு விற்று பிழைப்பை நடத்தியதை பற்றி அவர் என்னிடம் கூறியிருக்கிறார்.

அதாவது ...சிறு வயதிலிருந்தே அவருக்குப் பாட்டுப்பாடுவதென்றால் மிகவும் விருப்பமாம். டூரிங் கொட்டகையில் பாட்டைக் கேட்பதற்கென்றே அம்மா சுட்டுக் கொடுக்கும் முறுக்குகளை எடுத்துக் கொண்டு கொட்டகைக்கு வந்து விடுவாராம். இடைவேளையின் போதுதான் முறுக்கு விற்பதற்கு உள்ளே விடுவார்களாம். எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடல்களென்றால் உயிராம்.

அப்படி ஒரு முறை கதவு ஓரம் காதை வைத்துக் கொண்டு பாட்டை கேட்டுக் கொண்டிருக்கும் போது தட்டில் உள்ள முறுக்குகளை எல்லாம் மாடு ஒன்று சாப்பிட்டு விட்டதாம். பிறகென்ன அம்மாவிடம் செம டோசாம்.

ஷூட்டிங்கோ, டப்பிங்கோ, விழாக்களில் பங்கேற்பதற்கோ ஒப்புக் கொண்டால் எந்த காரணத்தை முன்னிட்டும் கேன்சல் செய்யவே மாட்டார். ஒருமுறை படத்தின் டப்பிங்...பேசி முடிக்கும் வரை எதுவுமே சொல்லாமல் டப்பிங் பேசி முடித்து விட்டார். இரண்டு நாட்களாக சரியான ஜுரமாம். வீட்டில் படுத்த படுக்கையாம். மகன் பூபதி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் டப்பிங்கிற்கு தேதி கொடுத்து விட்டேன்.... பேசிக்கொடுத்து விட்டுத்தான் வருவேன் என்று கூறிவிட்டு பிடிவாதமாக வந்து டப்பிங் பேசினார்.

இதை நான் கண்கூடாகப் பார்த்தேன்.... தொழில் மீது அவ்வளவு பக்தி. ஏராளமான நலிந்த நாடக கலைஞர்களுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார். அவர் தனது தாயாரை நடமாடும் தெய்வமாகவே கருதினார். அவர் சொல்லுக்கு கட்டுப்படுவார். அவருடைய அம்மா மனோரமாவை ‘பாப்பா’ என்றுதான் அழைப்பார். மனோரமாவுக்கு பூனைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஏராளமான பூனைகளை அவர் வளர்த்தார்.

ஒருமுறை காலில் பிரச்சினை ஆகி ஆஸ்பத்திரியில் இருந்தார். அப்போதும் போய் பார்த்ததேன்... இன்னோரு முறை உடல் நிலை மிகவும் மோசமாகி ஆஸ்பத்திரியில் இருந்தார். அப்போதும் போய் பார்த்தேன். நலம் விசாரிக்கச் சென்ற எனக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்து விட்டார். கண்டிப்பாக நலமடைந்து வந்து விடுவேன் மீண்டும் நடிக்க ஆரம்பிப்பேன் அன்று மனோதிடமாக கூறினார். அதன்படியே நலமாகி வந்து பல படங்களில் நடித்தார்.

அப்போதெல்லாம் அவருடைய மனோதிடத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கில் படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புரிந்த ஆச்சி மனோரமா தமது நடிப்பால் நமது தமிழ்நாட்டிற்கும் தமிழ் திரையுலகிற்கும் மாபெரும் பெருமைகளை சேர்த்து விட்டுச்சென்றிருக்கிறார்.

- நடிகை சச்சு


Next Story