மாநில செய்திகள்

தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மு.க.ஸ்டாலின் வழங்கினார் + "||" + MK Stalin presented the prize essay contest winners

தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் போட்டிகள்

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில், மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு, மாவட்டம் தோறும் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்றவர்களில் முதல் 3 பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதில் முதல் 2 பரிசுக்குரியவர்களை மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்து, நேற்று முன்தினம் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டது.

முதல் 3 இடங்களைபிடித்தவர்களுக்கு பரிசுகள்

இதில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், ஒவ்வொரு போட்டியிலும் 10 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது. இதற்கான பரிசளிப்பு விழா திருவள்ளூர் மாவட்டம், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு தி.மு.க. பொருளாளரும், இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பேச்சுப்போட்டியில் முதல் பரிசு திருச்சியை சேர்ந்த மாணவருக்கும், 2-ம் பரிசு காஞ்சீபுரம் மாவட்ட மாணவிக்கும், 3-ம் பரிசு கரூர் மாவட்ட மாணவிக்கும் வழங்கப்பட்டது. இதே போன்று கட்டுரை போட்டி மற்றும் கவிதை ஒப்பித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

7 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்படுகிறது

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கடந்த 7 ஆண்டுகளாக இந்த போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அண்ணாவின் பிறந்தநாளையொட்டி இதுவரை 9 ஆயிரத்து 945 மாணவ-மாணவிகளுக்கு 2 கோடியே 19 லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாய் பரிசாக தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் 3 இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகையாக கடந்த 6 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 797 மாணவ-மாணவிகளுக்கு 2 கோடியே 54 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நல்ல இளந்தலைமுறையினர் கிடைத்து விட்டனர்

இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பேசிய மாணவ- மாணவிகளின் பேச்சினை கேட்டபோது, எதிர்காலத்தில் தமிழ் சமுதாயத்திற்கு திறமை மிக்க நல்ல இளந்தலைமுறையினர் கிடைத்துவிட்டனர் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், மாநில இளைஞர் அணி செயலாளர்கள் மா.சுப்பிரமணியம், இ.ஜி.சுகவனம், சேலம் ஆர்.ராஜேந்திரன், சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், அசன் முகமது ஜின்னா, இ.பெ.செந்தில்குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவல்கள் தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.