மாநில செய்திகள்

தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + MK Stalin Speech

தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பாகுபாடு இருக்கக்கூடாது

நம்மை பொறுத்தவரையில் இந்த சமுதாயம் வாழவேண்டும். இந்த நாடு வாழ்ந்திட வேண்டும். இந்த சமுதாயத்தை, இந்த நாட்டை வாழவைக்கக்கூடிய வகையில் நம்முடைய பணி அமைந்திட வேண்டும் என்று சொன்னால், நம்முடைய இயக்கம் தொடர்ந்து கருணாநிதி தலைமையில் பீடுநடை போடவேண்டும். இதை நான் என்னுடைய பிறந்த நாள் செய்தியாக இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

சாதி, மதம், இனம், மொழி இவைகளைப் பொறுத்தவரையிலே யாருக்கும் பாகுபாடு இருக்கக்கூடாது. நம்முடைய தலைவர் கருணாநிதியின் தொலை நோக்கு தான் நம்மை போன்ற இளைஞர்களை இன்றைக்கு ஓரளவுக்கு பக்குவப்படுத்தி, தொடர்ந்து நாம் ஆற்றக்கூடிய பணிகளுக்கு உரமூட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

மார்ச் 1-ந் தேதி என்பது பாகுபாடு ஒழிக்கக்கூடிய தினமாக ஐக்கிய நாடுகள் சபைகள் அறிவித்து இன்றைக்கு இந்த நாளை கொண்டாடுகிறது. எனவே, கருணாநிதியின் வழிகாட்டுதலோடு அதை மனதிலே வைத்துக்கொண்டு நாம் பாடுபடவேண்டும். அந்த பாகுபாடுகளை ஒழிப்பதற்கு நாம் சபதம் ஏற்க வேண்டும். உறுதி எடுக்கவேண்டும். அப்படிப்பட்ட உறுதியை அந்த சபதத்தை நீங்கள் எல்லாம் ஏற்றால்தான் உள்ளபடியே நீங்கள் எனக்கு சொல்லக்கூடிய வாழ்த்துகள் மகிழ்ச்சிகரமாக அமையும்.

ஒரு லட்சம் யூனிட் ரத்தம்

நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதை நினைவுபடுத்தக்கூடிய வகையில் இந்த மார்ச் 1-ம் நாள் இருந்திட வேண்டும். பாகுபாடு காட்டாத ஒரு சமுதாயத்தை உருவாக்கிடவேண்டும். பாகுபாடு ஒழிப்பு கொள்கை என்பதை நம்முடைய உடம்பில் ஓடக்கூடிய ரத்தத்தோடு நிச்சயமாக நாம் ஒப்பிட முடியும். நம் அனைவருடைய நரம்புகளில் ஓடுவது ஒரே ரத்தம்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. எனவே, ரத்தத்தை பொறுத்தவரையிலே பாகுபாடு கிடையாது.

இன்னும் நான் வெளிப்படையாக சொல்ல விரும்புகிறேன். கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை வாழவைக்கிறது. அதேபோல கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை வாழவைக்கிறது.

அதனால்தான் உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ளவிரும்புகிறேன். மார்ச் 1-ந் தேதியிலிருந்து இந்த மாத இறுதி வரையிலே தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இளைஞர்கள், நம்முடைய தொண்டர்கள், ரத்தம் வழங்கக்கூடிய நிகழ்ச்சியை நடத்திட வேண்டும். எனவே, இந்த மாத இறுதிக்குள்ளாக 1 லட்சம் யூனிட் ரத்தம் நம்முடைய இளைஞர் அணியின் சார்பில் வழங்கப்பட்டிருக்கிற இந்த செய்தி வந்தாக வேண்டும்.

மாற்றத்தை நோக்கி...

ஒரு பயிர்வாழ அதற்கு பருவமாற்றங்கள் தேவைப்படுகிறது. அதைப்போல நம்முடைய வளர்ச்சிக்கும் பல மாற்றங்கள் தேவை. தொழில்நுட்பம் இன்றைக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நம்முடைய நாட்டிலே உருவாக்கியிருக்கிறது. மக்களுடைய எதிர்பார்ப்புகள் இன்றைக்கு மாற்றத்தை விரும்புகிறது. அதிலும் குறிப்பாக நம்முடைய தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

எனவே உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஊர், ஊராகச் செல்வோம். தெருத்தெருவாகச் செல்வோம். பகுதி பகுதியாகச் செல்வோம். வீடு, வீடாகச் செல்வோம். நம்முடைய பயணங்கள் முடிவதில்லை. அதைப்போல நம்முடைய பணிகள் முடிவதில்லை. முயற்சிகள் என்றைக்கும் தோற்றதில்லை. உண்மைகள் என்றைக்கும் பொய்த்தது இல்லை. எனவே நம்முடைய கடமைகளும் என்றைக்கும் நிற்பதில்லை என்ற அந்த உணர்வோடு நாம் உறுதி எடுப்போம்.

இந்த மார்ச் 1-ந் தேதியை இளைஞர் எழுச்சி நாளாக மட்டுமல்ல, பாகுபாடு ஒழிப்பு தினமாகவும் நாம் இன்றைக்கு இதை நடத்துகிறோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு ரத்ததானம் வழங்குவதற்கு அனைவரும் உறுதி எடுப்போம். சபதம் ஏற்போம். இதுதான் என்னுடைய பிறந்த நாள் செய்தி.

இவ்வாறு அவர் பேசினார்.