மாநில செய்திகள்

ஓட்டுச்சீட்டில் வேட்பாளர்களின் புகைப்படத்தை சேர்த்து அச்சிட முடிவு; இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு + "||" + Vote slip will have canditates photo soon

ஓட்டுச்சீட்டில் வேட்பாளர்களின் புகைப்படத்தை சேர்த்து அச்சிட முடிவு; இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு

ஓட்டுச்சீட்டில் வேட்பாளர்களின் புகைப்படத்தை சேர்த்து அச்சிட முடிவு; இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு
சில தொகுதிகளில் ஒரே பெயர் கொண்ட பல வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவது பற்றி இந்திய தேர்தல் கமிஷன் கவனத்தில் கொண்டது. இது வாக்காளர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.
சென்னை,

தேர்தலில் ஒரே பெயர் கொண்ட பலர் போட்டியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதன் எதிரொலியாக, ஓட்டுச் சீட்டில் வேட்பாளர்களின் புகைப்படத்தை சேர்த்து அச்சிட இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

குழப்பம்

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எலக்ட்ரானிக் வாக்கு எந்திரத்தில் வைக்கப்படும் ஓட்டுச் சீட்டு மற்றும் தபால் ஓட்டுச் சீட்டுகளில் இதுவரை வேட்பாளருக்கான வரிசை எண், வேட்பாளரின் பெயர், வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் ஆகியவை மட்டும் அச்சிடப்பட்டு வந்தன.

சில தொகுதிகளில் ஒரே பெயர் கொண்ட பல வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவது பற்றி இந்திய தேர்தல் கமிஷன் கவனத்தில் கொண்டது. இது வாக்காளர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.

புகைப்படமும் அச்சிடப்படும்

அதன்படி, வரும் மே 1-ந்தேதிக்கு மேல் நடக்க இருக்கும் அனைத்து தேர்தலிலும் பயன்படுத்தப்படவுள்ள, எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் ஒட்டப்படும் ஓட்டுச் சீட்டுகள், சாதாரண ஓட்டுச் சீட்டுகள், தபால் ஓட்டுச் சீட்டுகள் ஆகியவற்றில் ஏற்கனவே அச்சிடப்படும் விவரங்களுடன் அந்தந்த வேட்பாளர்களின் புகைப்படமும் அச்சிடப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

அந்த புகைப்படத்தின் அகலம் மற்றும் உயரம் முறையே 2 செ.மீ.க்கு 2.5 செ.மீயாக இருக்கும். எனவே தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் அண்மைகால புகைப்படத்தை வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்பக்கத்தில் வேட்பாளரின் கையெழுத்து இடம்பெற்றிருக்க வேண்டும்.

தள்ளுபடிக்கு காரணமாகாது

அந்தப் புகைப்படம் 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதா என்பது பற்றிய உத்தரவாதம், வேட்பாளரிடமோ அல்லது அவரது ஏஜெண்டிடமோ பெறப்படும். வேட்புமனுவுடன் புகைப்படத்தை தாக்கல் செய்யாவிட்டால், மனு பரிசீலனைக்குள் புகைப்படத்தை தாக்கல் செய்யும்படி அதிகாரி நோட்டீசு பிறப்பிப்பார்.

புகைப்படம் கொடுக்காவிட்டால் ஓட்டுச் சீட்டில் அவரது புகைப்படம் அச்சிடப்படாது என்பதும் அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருக்கும். அதன் பிறகும் புகைப்படத்தைத் தராத வேட்பாளரின் புகைப்படம், ஓட்டுச் சீட்டில் அச்சேற்றப்படாது. புகைப்படம் கொடுக்காதது, வேட்புமனுவை தள்ளுபடி செய்வதற்கான ஒரு காரணமாக எடுக்கப்படாது.

மே 1-க்கு மேல்

அந்த புகைப்படத்துடன் கூடிய ஓட்டுச்சீட்டு, நோட்டீசு பலகையில் வேட்புமனு பரிசீலனைக்கு மறுநாளில் ஒட்டப்படும் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவிப்பதோடு, அதில் உள்ள குறைகளை திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பார்.

இந்த அறிவிப்புகள் அனைத்தும் வரும் மே 1-ந்தேதிக்கு மேல் நடக்கும் தேர்தலில் இருந்து அமலுக்கு வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.