மாநில செய்திகள்

‘கொம்பன்’ படத்தை நீதிபதிகள் குழு பார்த்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Judge raises question on communal harmony on releasing Komban

‘கொம்பன்’ படத்தை நீதிபதிகள் குழு பார்த்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

‘கொம்பன்’ படத்தை நீதிபதிகள் குழு பார்த்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
வருகிற 2-ந்தேதி வெளியாக உள்ள கொம்பன் படத்தில் சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் காட்சிகள், வசனங்கள் உள்ளனவா என்பதை ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,

வருகிற 2-ந்தேதி வெளியாக உள்ள கொம்பன் படத்தில் சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் காட்சிகள், வசனங்கள் உள்ளனவா என்பதை ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

‘கொம்பன்’ படம்

நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்’ படம் வருகிற 2-ந்தேதி வெளியாக உள்ளது. இந்தப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்து உள்ளார். முத்தையா இயக்கியுள்ளார்.

இந்த படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

‘கொம்பன்’ என்ற படத்தின் தலைப்பே வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே இருந்து வரும் பிரச்சினையை மையமாக வைத்து இந்தப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கதாநாயகன், வில்லன் ஆகியோர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் போன்று படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினையை ஏற்படுத்தும்

குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பெயரை சொல்லி ராமநாதபுரத்தில் எங்களை எதிர்க்க எவண்டா இருக்கான் என்பது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று படத்தில் வரும் சில காட்சிகள், வசனங்கள் குறிப்பிட்ட 2 சமூகங்களை அவமதிக்கும் வகையிலும், 2 தேசிய தலைவர்களை அவமதிக்கும் வகையிலும் இருப்பதாக சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இந்த படத்தை திரையிட அனுமதித்தால் பொது அமைதி கெடும்.

எனவே, படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். படத்தில் சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் காட்சிகள் உள்ளனவா என்பதை பார்க்க படத்தை நீதிமன்றத்தில் போட்டுக்காண்பிக்க தயாரிப்பாளர், இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

குழு அமைப்பு

இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறி இருப்பதாவது:-

“மனுதாரர் மற்றும் அவரது தரப்பில் 3 வக்கீல்கள், தயாரிப்பாளர் மற்றும் அவரது தரப்பில் 3 வக்கீல்கள் சென்னையில் 31-ந்தேதி (இன்று) காலை 8 மணியில் இருந்து 10 மணிக்குள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் 2 பேர் தலைமையில் கொம்பன் படத்தை பார்க்க வேண்டும். அதன்பின்பு, நீதிபதிகள் குழு அதுதொடர்பான அறிக்கையை ‘பேக்ஸ்’ மூலம் உடனடியாக மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த அறிக்கை அடிப்படையில் வழக்கு மீண்டும் இன்று விசாரிக்கப்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.”

இவ்வாறு இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளது.