மாநில செய்திகள்

திரைப்பட பிரச்சினையை தூக்கிக்கொண்டு போராடுவது நியாயமா? டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, சீமான் கேள்வி + "||" + Seeman raised question against Dr.Krishnanasamy over komban release

திரைப்பட பிரச்சினையை தூக்கிக்கொண்டு போராடுவது நியாயமா? டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, சீமான் கேள்வி

திரைப்பட பிரச்சினையை தூக்கிக்கொண்டு போராடுவது நியாயமா? டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, சீமான் கேள்வி
‘கொம்பன்’ படத்தில் தேவேந்திரகுல மக்களை அவமதிக்கும் காட்சிகளும் வசனங்களும் இருப்பதாகச் சொல்லி டாக்டர் கிருஷ்ணசாமி போராடி வருகிறார். ‘கொம்பன்’ படத்தை டாக்டர் கிருஷ்ணசாமியுடன் ஒருசேர உட்கார்ந்து பார்க்க நான் தயாராக இருக்கிறேன். படத்தில் அவர் சொல்லும் தவறுகள் நியாயமானதாக இருந்தால், அவர் பக்கம் இருந்து நானும் போராடுகிறேன்.
சென்னை,

மக்கள் பிரச்சினை எத்தனையோ இருக்கையில் திரைப்பட பிரச்சினையை தூக்கிக்கொண்டு போராடுவது நியாயமா? என்று டாக்டர் கிருஷ்ணசாமியிடம் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களின் பிரச்சினைகள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒரு திரைப்படத்தில் என்ன கதை, எத்தகைய கருத்து எனத் தெரியாமலேயே அந்தப் படத்துக்கு எதிராகப் பிரச்சினைகள் கிளப்புவது தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக டாக்டர் கிருஷ்ணசாமி திரைப்படங்களுக்கு எதிராகப் போராடுவதையே தனது கட்சியின் முழு நேர கடமையாக்கிவிட்டார் போல் இருக்கிறது.

மேகதாது அணை, நியூட்ரினோ திட்டம் என மக்களைப் பாதிக்கும் எத்தனையோ பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கையில், ஒரு திரைப்படப் பிரச்சினையைத் தூக்கிக்கொண்டு போராடுவது டாக்டர் கிருஷ்ணசாமிக்கு நியாயமாகப்படுகிறதா? மக்கள் நலனுக்காக நிற்கிற தலைவனாக மேகதாது, நியூட்ரினோ திட்டங்களைத் தடை செய்யச் சொல்லி நீதிமன்றத்துக்குப் போகாத டாக்டர் கிருஷ்ணசாமி, ‘கொம்பன்’ படத்துக்கு தடை கேட்டு நீதிமன்றத்துக்குப் போவது நகைப்பாகத் தெரியவில்லையா?

‘கொம்பன்’ படம்

‘கொம்பன்’ படத்தில் தவறு இருப்பதாக நினைத்தால், படத்தைப் போட்டுக் காட்டச் சொல்லி தனது மனக் கருத்தை டாக்டர் கிருஷ்ணசாமி வெளிப்படுத்தி இருக்கலாமே. அதைச் செய்யாமல் ‘கொம்பன்’ படத்தைத் தடை செய்யச் சொல்லி சட்டமன்றத்தில் குரல் எழுப்பியும் நீதிமன்றத்துக்குப் போய் தடை கேட்டும் போராட வேண்டிய அவசியம் என்ன வந்தது?.

‘கொம்பன்’ படத்தில் தேவேந்திரகுல மக்களை அவமதிக்கும் காட்சிகளும் வசனங்களும் இருப்பதாகச் சொல்லி டாக்டர் கிருஷ்ணசாமி போராடி வருகிறார். ‘கொம்பன்’ படத்தை டாக்டர் கிருஷ்ணசாமியுடன் ஒருசேர உட்கார்ந்து பார்க்க நான் தயாராக இருக்கிறேன். படத்தில் அவர் சொல்லும் தவறுகள் நியாயமானதாக இருந்தால், அவர் பக்கம் இருந்து நானும் போராடுகிறேன்.

மலிவான அரசியல்

ஆனால், அதைச் செய்யாமல் அரசியல் ஆதாயத்துக்காகவும் யாரையோ திருப்தி செய்யவும் ‘கொம்பன்’ படத்தை தடை செய்யக் கோரும் அவருடைய போராட்டம் தொடர்ந்தால், அது மதிப்புமிக்க ஒரு தலைவர் செய்கிற மலிவான அரசியலாகவே இருக்கும்.

இத்தகைய அர்த்தமற்ற போராட்டங்களைக் கைவிட்டு, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியலுக்கான போராட்டங்களில் கிருஷ்ணசாமி அக்கறை காட்டினால் எங்கள் எல்லோருக்குமான ‘கொம்பன்’ நிச்சயம் அவர்தான். ‘கொம்பன்’ என்றால் உயர்ந்தவன் என்கிற அர்த்தமும் அவருக்கே சாலப் பொருந்துவதாக இருக்கும்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.