மாநில செய்திகள்

சட்டசபைக்கு வந்த விஜயகாந்த்; போராட்டம் நடத்திய தே.மு.தி.க. உறுப்பினர்களை அழைத்துச் சென்றார் + "||" + Vijayakanth hits out at AIADMK regime over suspension row and presence assembly

சட்டசபைக்கு வந்த விஜயகாந்த்; போராட்டம் நடத்திய தே.மு.தி.க. உறுப்பினர்களை அழைத்துச் சென்றார்

சட்டசபைக்கு வந்த விஜயகாந்த்; போராட்டம் நடத்திய தே.மு.தி.க. உறுப்பினர்களை அழைத்துச் சென்றார்
வாயில் கருப்பு துணி கட்டி வந்த அவர்கள் சட்டசபையின் 4-வது நுழைவு வாயிலுக்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தே.மு.தி.க. உறுப்பினர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட அன்று எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் கூட்டத்தில் பங்கேற்காததால், அவருக்கு இந்த நடவடிக்கை பொருந்தாது.
சென்னை,

சட்டசபைக்கு வெளியே வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. உறுப்பினர்களை விஜயகாந்த் வந்து அழைத்து சென்றார்.

தே.மு.தி.க. உறுப்பினர்கள் போராட்டம்

தமிழக சட்டசபையில், கடந்த மாதம் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது ஏற்பட்ட பிரச்சினையில் தே.மு.தி.க. உறுப்பினர்கள் கூட்டத் தொடர் முழுவதும் கூண்டோடு சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

அதனால், அவர்கள் தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் மீதான விவாதத்திலும் பங்கேற்க முடியவில்லை. இருந்தாலும், மக்கள் பிரச்சினைகள் பற்றி பேச கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என்று சட்டசபைக்கு வெளியே தே.மு.தி.க. உறுப்பினர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்.

விஜயகாந்த் வருகை

வாயில் கருப்பு துணி கட்டி வந்த அவர்கள் சட்டசபையின் 4-வது நுழைவு வாயிலுக்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தே.மு.தி.க. உறுப்பினர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட அன்று எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் கூட்டத்தில் பங்கேற்காததால், அவருக்கு இந்த நடவடிக்கை பொருந்தாது.

விஜயகாந்த் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கலாம் என்ற நிலை இருந்தும், அவர் கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முற்பகல் 11.25 மணிக்கு சட்டசபைக்கு வந்த விஜயகாந்த், 10-வது நுழைவு வாயில் வழியாக சென்று, சட்டசபை வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு புறப்பட்டு சென்றார்.

அழைத்து சென்றார்

பின்னர், திடீரென மதியம் 12.05 மணிக்கு மீண்டும் சட்டசபை வளாகத்திற்கு காரில் வந்த விஜயகாந்த், போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. உறுப்பினர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘‘வாயில் ஏன் கருப்பு துணி கட்டியிருக்கிறீர்கள். வாருங்கள் அனைவரும் செல்வோம்’’ என்றார். கட்சித் தலைவரின் அழைப்பை ஏற்று தே.மு.தி.க. உறுப்பினர்கள் அனைவரும் அவருடன் புறப்பட்டனர்.

அப்போது, நிருபர்களுக்கு பேட்டியளித்த விஜயகாந்த், ‘‘ஓட்டு போட்ட மக்களுக்காக பேசவிடாமல் சபாநாயகர் தே.மு.தி.க. உறுப்பினர்களை அசிங்கப்படுத்துகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்த பட்ஜெட்டில், ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி இந்த அரசு நடப்பதாக தெரிவித்துள்ளார். அவரோ சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு சென்றுவிட்டு வீட்டில் இருக்கிறார். அவரது வழிகாட்டுதல்படி தமிழக அரசு நடப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார்’’ என்றார்.

அதன்பின்னர், தே.மு.தி.க. உறுப்பினர்களுடன் விஜயகாந்த் புறப்பட்டு சென்றார்.