மாநில செய்திகள்

பல்கலைக்கழக கட்டிட விபத்து; ரூ.10 லட்சம் வழங்கவேண்டும்; கருணாநிதி வலியுறுத்தல் + "||" + Tamil Nadu must be paid Rs.10 lakhs to Tiruvarur Building Collapse Victims; says karunanidhi

பல்கலைக்கழக கட்டிட விபத்து; ரூ.10 லட்சம் வழங்கவேண்டும்; கருணாநிதி வலியுறுத்தல்

பல்கலைக்கழக கட்டிட விபத்து; ரூ.10 லட்சம் வழங்கவேண்டும்; கருணாநிதி வலியுறுத்தல்
உயிரிழந்த 5 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பிலும், அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையிலும் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய, மாநில அரசுகள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதமும், காயமடைந்தவர்களின் பாதிப்புக்கு உகந்தவாறும் உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
சென்னை,

திருவாரூரில் பல்கலைக்கழக கட்டிட விபத்தில் பலியான 5 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

கட்டிட விபத்து

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்குவதற்காக நன்னிலம் அருகே நாகக்குடி என்ற கிராமத்தில் 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அங்கே குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

கட்டுமானப்பணிகளில் தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு கட்டிடத்தின் 4-வது மாடியில் மேற்கூரைக்கான கான்கிரீட் போடும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அந்தப் பகுதி திடீரென சரிந்து விழுந்ததில், அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டனர்.

5 பேர் பலி

உடனடியாக அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு பெரும்பாலானவர்களை மீட்ட போதிலும், 5 பேர் சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள். மாவட்டக் கழகச் செயலாளர் கலைவாணன், மற்றும் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே சென்று மீட்பு பணியிலே ஈடுபட்டதாகத் தொலைபேசியில் தெரிவித்தார்கள்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்திருக்கிறார்கள்.

நிவாரணம் வழங்கவேண்டும்

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 5 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பிலும், அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையிலும் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய, மாநில அரசுகள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதமும், காயமடைந்தவர்களின் பாதிப்புக்கு உகந்தவாறும் உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.