மாநில செய்திகள்

குறைகள் இல்லாத மக்களாட்சியை தி.மு.க. அமைக்கும்; மலைவாழ் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + MK Stalin says DMK will give people governance if elected

குறைகள் இல்லாத மக்களாட்சியை தி.மு.க. அமைக்கும்; மலைவாழ் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

குறைகள் இல்லாத மக்களாட்சியை தி.மு.க. அமைக்கும்; மலைவாழ் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
விரைவில் தேர்தல் வர இருக்கிறது. நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கையின் அடிப்படையில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இன்று தமிழகத்தில் நடந்து வருவது ஆட்சி அல்ல, காணொலி காட்சி. முதல் -அமைச்சர் ஜெயலலிதா கோட்டையில் இருந்தபடியே பல கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துவிட்டு போய்விடுவார்.
திருச்சி,

தமிழகத்தில் குறைகள் இல்லாத ‘மக்கள் ஆட்சி’யை கருணாநிதி தலைமையில் தி.மு.க. அமைக்கும் என்று பச்சமலை, மலைவாழ் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் துறையூர் அருகே உள்ள பச்சமலை மலைவாழ் மக்களின் குறைகளை கேட்க அவர்களை சந்திப்பதற்காக நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தார். திருச்சியில் தங்கியிருந்த அவர் நேற்று காலை பச்சமலைக்கு புறப்பட்டார். செம்புளிச்சாம் பட்டி என்ற கிராமத்தில் ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

மலை பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் மக்கள் அங்குள்ள குறைகள், தங்களது வாழ்வாதாரம் தொடர்பாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பற்றி பேசினார்கள். இதனை தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது:-

மேம்பாட்டு வாரியம்

நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின்போது பச்சமலை பகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக தற்போது இங்கு வந்து உள்ளேன். 20-4-2007 அன்று தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டு, அந்த வாரியத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

ஆனால் நான்கரை ஆண்டுக்கும் மேலாக நடந்துவரும் இந்த ஆட்சியில் மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும்

விரைவில் தேர்தல் வர இருக்கிறது. நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கையின் அடிப்படையில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இன்று தமிழகத்தில் நடந்து வருவது ஆட்சி அல்ல, காணொலி காட்சி. முதல் -அமைச்சர் ஜெயலலிதா கோட்டையில் இருந்தபடியே பல கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துவிட்டு போய்விடுவார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு செல்போன் கொடுக்கப்போவதாக 3 மாதங்களுக்கு முன் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் இன்று வரை செல்போன் யாருக்காவது கொடுத்து இருக்கிறாரா?

குறை இல்லாத மக்களாட்சி

தமிழகத்தில் குறைகள் இல்லாத மக்கள் ஆட்சியை கருணாநிதி தலைமையில் தி.மு.க. அமைக்கும். அ.தி.மு.க. ஆட்சியை அகற்றவேண்டும் என மக்கள் உறுதி எடுத்துவிட்டார்கள்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

சின்ன இலுப்பூரில் ஸ்டாலினுக்கு முதியவர் ஒருவர் மலைத்தேன், தினை மாவு, வரகு அரிசி ஆகியவற்றை நினைவு பரிசாக வழங்கினார். டாப் செங்காட்டுப்பட்டியில் இறுதியாக சுற்றுப்பயண நிகழ்ச்சியை முடித்த ஸ்டாலின் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் இரவு திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.