மக்களுக்காக விரைவில் பணியாற்ற காத்திருக்கிறேன்: ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை முறையை வெளியிட வேண்டும்; அவரது அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டி


மக்களுக்காக விரைவில் பணியாற்ற காத்திருக்கிறேன்:  ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை முறையை வெளியிட வேண்டும்; அவரது அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 7 Jan 2017 10:45 PM GMT (Updated: 7 Jan 2017 7:38 PM GMT)

மக்களுக்காக விரைவில் பணியாற்ற காத்திருக்கிறேன் என்றும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையை வெளியிட வேண்டும் என்றும் அவரது அண்ணன் மகள் தீபா கூறினார்.

சென்னை,

மக்களுக்காக விரைவில் பணியாற்ற காத்திருக்கிறேன் என்றும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையை வெளியிட வேண்டும் என்றும் அவரது அண்ணன் மகள் தீபா கூறினார்.

ஜெயலலிதா அண்ணன் மகள்

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் இருந்து வந்த ஜெயலலிதா, கடந்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி மரணமடைந்த நிலையில், அவர் வகித்த முதல்-அமைச்சர் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பை வி.கே.சசிகலாவும் ஏற்றுக்கொண்டனர்.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரை பார்க்க அவரது அண்ணன் மகள் தீபா பல முறை ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆனால், உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் உருவத்தையும், குரலையும் ஒத்திருக்கின்ற தீபா சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தொண்டர்கள் உற்சாகம்

தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னை வரும் அ.தி.மு.க. தொண்டர்கள் தினமும் தீபாவின் வீட்டிற்கு அவரை பார்ப்பதற்காக வருகின்றனர். பெரும்பாலானோர் அவரை அரசியலில் குதிக்க வலியுறுத்துகின்றனர். அவர்களிடம் தீபா, அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறி வருகிறார்.

நேற்றும் தீபாவை காண அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் அங்கு வந்திருந்தனர். மாலை 5 மணி அளவில் வீட்டின் மாடிக்கு வந்த தீபா தொண்டர்களை நோக்கி, ‘இரட்டை இலை’யை குறிக்கும் வகையில் இரட்டை விரலை காட்டினார். தொண்டர்களும் உற்சாகம் அடைந்து இரட்டை விரலை காண்பித்தனர். பின்னர், தொண்டர்கள் மத்தியில் தீபா சில நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொறுமை காப்பது அவசியம்

அனைவரது விருப்பத்தை ஏற்று சிறிது நேரம் உரையாற்றுகிறேன். மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஜெயலலிதாவை இழந்து மீளா துயரத்தில் நாம் இருக்கிறோம். சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் பொறுமை காப்பது அவசியம்.

“மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா?, மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?” என்று ஏழை, எளிய மக்களுக்காக குரல் கொடுத்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஜெயலலிதாவின் நல்லாசியுடன் செயல்படுவோம். எம்.ஜி.ஆர். வழியில் அனைவரும் செயல்படுவோம்.

பணியாற்ற காத்திருக்கிறேன்

ஜெயலலிதாவின் தியாகத்துக்கு ஒப்பே கிடையாது. அவரது பெயர், புகழ் என்றும் நிலைத்திருக்கும். உரிய காலத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன். நல்ல பாதையில் நாளைய சமுதாயத்தின் வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் மனதில் வைத்துக்கொண்டு எனது முடிவு இருக்கும். உங்களுக்காக (மக்களுக்காக) நான் விரைவில் பணியாற்ற காத்திருக்கிறேன்.

ஜெயலலிதா பெயர், புகழை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது என்றார்.  இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தீபா அளித்த பதில்களும் வருமாறு:-

புதிய பயணம்

கேள்வி:- புதிய கட்சியை எப்போது தொடங்க இருக்கிறீர்கள்?.

பதில்:- புதிய பயணத்தை மேற்கொள்ள உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளேன். மிக விரைவில் தீர்க்கமான முடிவு எடுத்து அறிவிப்பேன்.

கேள்வி:- உங்களை பார்க்க இவ்வளவு தொண்டர்கள் வருகிறார்களே?, இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?.

பதில்:- ஜெயலலிதா மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு, நம்பிக்கையை என்னால் உணர முடிகிறது.

கேள்வி:- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தான் நீங்கள் வெளியே தெரிகிறீர்கள். அரசியலுக்கு வந்தால் உங்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறீர்களா?.

பதில்:- மக்களுடைய விருப்பத்திற்காக இது நடக்கிறது. மக்கள் விரும்பினால் இந்த பணியை செய்ய தயங்க மாட்டேன். இது என்னுடைய ஆசையில்லை.

கேள்வி:- அரசியலில் உங்களுக்கு ஆசை இல்லையா?.

பதில்:- நிச்சயமாக விருப்பம் இருந்தது. கூர்ந்து கவனித்து வருகிறேன்.

யாரும் பேசவில்லை

கேள்வி:- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அன்று முக்கிய அறிவிப்பு வெளிவருமா?.

பதில்:- நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

கேள்வி:- அ.தி.மு.க. பெரிய கட்சி. 2-ம் கட்ட தலைவர்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உங்களுக்கு யாராவது ஆதரவு தெரிவித்து சந்தித்தார்களா?.

பதில்:- யாரும் என்னை சந்தித்து கலந்து பேசவில்லை. தொண்டர்களுடன் கலந்துபேசி, எதிர்காலத்தில் எனது பயணம் எப்படி இருக்கும் என்பதை அறிவிப்பேன். தொண்டர்களின் எதிர்பார்ப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொள்வேன். மக்களின் விருப்பமும் இதில் இருக்கிறது.

கேள்வி:- புதிய கட்சி தொடங்கினால், பிரசார சுற்றுப்பயணம் எதுவும் செய்வீர்களா?.

பதில்:- அதுபோன்ற ஏற்பாடு எதுவும் செய்யவில்லை. தொண்டர்கள் விரும்புவதை தெரிந்து கொண்டு முடிவு எடுப்பேன்.

கேள்வி:- ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார்?. நீங்களா?.

பதில்:- நான் சொல்லவில்லை. பலரது விருப்பம்.

ஜெயலலிதா சாவில் மர்மம்?

கேள்வி:- முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உங்களிடம் தொடர்புகொண்டாரா?.

பதில்:- இதுபோன்ற செய்திகள் தவறு. யாரும் என்னை தொடர்புகொள்ளவில்லை. நானும் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை.

கேள்வி:- உங்களது சகோதரர் தீபக்கின் ஆதரவே உங்களுக்கு இல்லையே?.

பதில்:- அது அவரது தனிப்பட்ட கருத்து.

கேள்வி:- உங்கள் முன்னேற்றத்தை தடுக்க சதி நடப்பதாக கருதுகிறீர்களா?.

பதில்:- எந்த சதியும் நடப்பதாக தெரியவில்லை. தொண்டர்கள் வருவதே ஆச்சரியமாக இருக்கிறது. இதை யாரும் உருவாக்கவில்லை. தானாக உருவாகியிருக்கிறது. ஜெயலலிதா இடத்தில் இன்னொருவரை வைத்து பார்க்க விரும்புகிறார்கள்.

கேள்வி:- ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக நினைக்கிறீர்களா?.

பதில்:- ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சை முறைகளையும் வெளியிட வேண்டும். அதை அனைவரும் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.

சசிகலாவை எதிர்த்து போட்டியா?

கேள்வி:- சசிகலா தேர்தலில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிடுவீர்களா?.

பதில்:- அதுபோன்ற எண்ணம் எனக்கு கிடையாது.

கேள்வி:- சசிகலாவை நீங்கள் சென்று சந்திப்பீர்களா?.

பதில்:- அவசியம் இருப்பதாக தெரியவில்லை.

கேள்வி:- உங்கள் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக எப்போது வெளிவரும்?.

பதில்:- மிக விரைவில் எதிர்பார்க்கலாம். குறுகிய காலக்கட்டத்தில் எதிர்பார்க்கலாம். எம்.ஜி.ஆர். பிறந்தநாளுக்கு பிறகு எதிர்பார்க்கலாம்.  இவ்வாறு தீபா கூறினார்.

Next Story