வார்தா புயல் பாதிப்பு வண்டலூர் உயிரியல் பூங்கா காணும் பொங்கலுக்கு திறப்பு இல்லை


வார்தா புயல் பாதிப்பு வண்டலூர் உயிரியல் பூங்கா காணும் பொங்கலுக்கு திறப்பு இல்லை
x
தினத்தந்தி 11 Jan 2017 9:11 AM GMT (Updated: 11 Jan 2017 9:11 AM GMT)

வார்தா புயலால் பாதிப்பு அடைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா வருகிற காணும் பொங்கலுக்கு திறக்கபாடாது.

வார்தா புயல் சென்னை நகரை தாக்கி சூறையாடியது. மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தது. வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பலத்த சேதம் அடைந்தது. பூங்காவில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. பூங்கா முழுவதும் மரக்கழிவுகள் சிதறி கிடந்தன. விலங்குகளின் இருப்பிடங்களும் பாதிப்பு அடைந்தன. பார்வையாளர்கள் சுற்றி பார்க்க வைக்கப்பட்டு இருந்த சைக்கிள்களும் சேதம் அடைந்தன.

புயலால் பாதிப்படைந்த பூங்காவை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு மரங்களை உடனே அகற்றும்படி உத்தரவிட்டார். இதையடுத்து விலங்குகளை பாதுகாப்பாக அடைத்து விட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

முதலில் பார்வையாளர்கள் நடந்து செல்லும் பாதையில் கிடந்த மரங்கள் அகற்றப்பட்டன. சேதம் அடைந்த விலங்குகளின் இருப்பிடங்கள் சரி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் சரிந்த அனைத்து மரங்களையும் அகற்றுவதில்தான் தாமதம் ஆனது.

எந்திரம் மூலம் மரங்களை துண்டு துண்டாக வெட்டி அகற்றி ஒரே இடத்தில் குவித்து வைத்துள்ளனர். மேலும் மரக்கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் பண்டிகையின்போது வண்டலூர் பூங்காவில் ஏராளமான மக்கள் கூடுவார்கள். சுமார் 1½ லட்சம் பேர் வரை வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பே பூங்கா அதிகாரிகள் செய்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு வார்தா புயலால் பலத்த சேதம் அடைந்த பூங்காவை சீரமைக்கும் பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. இதனால் பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

காணும் பொங்கலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் பூங்காவை அதற்குள் முழுமையாக சீரமைக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து வண்டலுர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும் போது

வார்தா புயலால் வண்டலுர் பூங்காவில் ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. அவை வெட்டப்பட்டு பூங்காவுக்குள் வைக்கப்பட்டு இருக்கிறது. பூங்காவில் இருந்து வெளியே இன்னும் கொண்டு செல்லப்படவில்லை. சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியாத நிலையில் பொதுமக்கள் அதிக அளவு கூடுவார்கள் என்பதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு வண்டலுர் பூங்கா திறக்கப்படவில்லை. சீரமைப்பு பணிகள் முடிய இன்னும் 10 நாட்கள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story