தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை; பன்னீர் செல்வம் நாளை ஆந்திரா செல்கிறார்


தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை; பன்னீர் செல்வம் நாளை ஆந்திரா செல்கிறார்
x
தினத்தந்தி 11 Jan 2017 1:32 PM GMT (Updated: 11 Jan 2017 1:32 PM GMT)

குடிநீர் தேவை பற்றி விவாதிப்பதற்காகவும், தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகரம் அமராவதிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை செல்கிறார்.



சென்னை, 

தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை நாளை ஆந்திராவில்  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டது. பரவலாக குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. சென்னையில் இவ்வாண்டு பருவமழை காலங்களில் போதிய மழை பெய்யவில்லை. மழை வந்ததும், போனதும் தெரியாத நிலையே உள்ளது. சென்னையில் மட்டும் 57 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை பொய்துப் போனதைத் தொடர்ந்து குடிநீர்ப்பஞ்சம் வருவதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் பஞ்சம் வருவதைத் தவிர்ப்பதற்காக கிருஷ்ணாநதி நீரை திறந்துவிடவேண்டும் என ஆந்திரா பிரதேசம் மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி 7-ந் தேதி கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் குடிநீர் தேவை பற்றி விவாதிப்பதற்காகவும், தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகரம் அமராவதிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை செல்கிறார். சந்திரபாபு நாய்டுவை சந்தித்து பேசுகிறார். சந்திரபாபுவின் கருத்துப்படி இந்தப் பேச்சுவார்த்தைக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செல்வதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கு கங்கை நீர் பங்கீடு தொடர்பாக ஆந்திராவிற்கு சென்று அம்மாநில முதல்-மந்திரியுடன் தமிழக முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவது இதுதான் முதல் முறையாகும். இதற்கு முன்பு இரண்டு மாநிலங்களுக்கும் இடையே கடிதப்போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது.

தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக விவசாயிகளின் பங்களிப்பாக ஆந்திராவுக்கு ரூ.400 கோடி ரூபாயை தமிழகம் கொடுக்க வேண்டும். இந்த நிதிப் பங்கீடு எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ் ஆகியோரின் ஆட்சி காலத்தில் போடப்பட்டதாகும். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய ஆந்திர பிரதேச நிதித்துறை மந்திரி யனமாலா ராமகிருஷ்ணுடு, ரூ.400 கோடி பங்கீட்டை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இந்த சந்திப்பின்போது கேட்போம் என்று குறிப்பிட்டார். 

Next Story