ஜல்லிக்கட்டு சர்ச்சை; டுவிட்டரில் இருந்து திரிஷா வெளியேறினார்!


ஜல்லிக்கட்டு சர்ச்சை; டுவிட்டரில் இருந்து திரிஷா வெளியேறினார்!
x
தினத்தந்தி 15 Jan 2017 6:47 AM GMT (Updated: 15 Jan 2017 6:47 AM GMT)

ஜல்லிக்கட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை திரிஷா, டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறி உள்ளார்.

சென்னை, 

ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய விலங்குகள் நல அமைப்பான பீட்டாவில் நடிகை திரிஷா நீடிப்பதற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  

 டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் திர்ஷாவை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் பதிவிடப்பட்டது.

திரிஷாவை இழிவுபடுத்துவது போல் சுவரொட்டி ஒன்றையும் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

காரைக்குடி அருகே திரிஷா நடிக்கும் கர்ஜனை படத்தின் படப்பிடிப்பு நடந்தது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அங்கு திரிஷாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு படக்குழுவினர் அங்கிருந்து வெளியேறினார்கள். திருச்சியில் இருந்த திரிஷாவுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்து அவரை பத்திரமாக விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.

 தனக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் மற்றும் அவதூறு சுவரொட்டியால் திரிஷா அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் எப்போதும் பேசியதே இல்லை. ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தையும் இழிவுபடுத்துவதுதான் தமிழ் கலாசாரமா? உங்களை தமிழன் என்று சொல்லிக்கொள்ளவும் தமிழ் கலாசாரம் பற்றி பேசவும் வெட்கப்பட வேண்டும். இதுபோன்ற மிரட்டல்களுக்கு நான் பணிந்தது கிடையாது. பயப்படவும் மாட்டேன். இந்த பிரச்சினையில் பலர் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்து உள்ளனர். நடிகர் சிம்புவும் ஆதரவான கருத்து வெளியிட்டு இருக்கிறார். 

கர்ஜனை படக்குழுவினர் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள். எனக்கு ஆதராக இருக்கும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறினார். இதற்கிடையே திரிஷாவின் டுவிட்டர் பகுதியில் சர்ச்சைக்குரிய தகவல் வெளியிடப்பட்டது. அவருடைய டுவிட்டர் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து உள்ளதாக திரிஷா குறிப்பிட்டு உள்ளார். இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கும் வரையில் தன்னுடைய டுவிட்டர் பகுதியில் இருந்து விலகுவதாக திரிஷா குறிப்பிட்டு உள்ளார். 

Next Story