நூற்றாண்டு விழாவையொட்டி எம்.ஜி.ஆர். சிலையை சசிகலா திறந்து வைக்கிறார் ராமாவரத்தில் நாளை விழா நடைபெறுகிறது


நூற்றாண்டு விழாவையொட்டி எம்.ஜி.ஆர். சிலையை சசிகலா திறந்து வைக்கிறார் ராமாவரத்தில் நாளை விழா நடைபெறுகிறது
x
தினத்தந்தி 15 Jan 2017 9:29 PM GMT (Updated: 15 Jan 2017 9:29 PM GMT)

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நாளை சென்னை ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா திறந்து வைக்கிறார். அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– எம்.ஜி.ஆர். நூற்றாண

சென்னை,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நாளை சென்னை ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா திறந்து வைக்கிறார்.

அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள்

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 100–வது ஆண்டு பிறந்த நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.45 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆருடைய உருவ சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, எம்.ஜி.ஆரின் 100–வது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார்.

தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, ‘‘வள்ளல் திலகம் எம்.ஜி.ஆர்.’’ என்ற நூலை வெளியிட்டு, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 1 கோடியே 4 லட்சம் ரூபாயை குடும்ப நல நிதியுதவியாக வழங்க உள்ளார்.

கொடி ஏற்றுகிறார்

மேலும், சசிகலா, எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்திற்கு சென்று, அங்கு நுழைவு வாயிலில் மறுநிர்மாணம் செய்யப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் அ.தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து, இல்லத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலையை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து சசிகலா, எம்.ஜி.ஆர். பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்ல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள கருத்தரங்கை தொடங்கிவைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சி, எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உள்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story