தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி வேண்டும் உடனடியாக ரூ.1,000 கோடி வழங்கவும்; பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்


தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி வேண்டும் உடனடியாக ரூ.1,000 கோடி வழங்கவும்; பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
x
தினத்தந்தி 16 Jan 2017 8:45 PM GMT (Updated: 16 Jan 2017 5:32 PM GMT)

தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சென்னை,

தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.39 ஆயிரத்து 565 கோடி வழங்கவேண்டும் என்றும், உடனடியாக ரூ.1,000 கோடி ஒதுக்கவேண்டும் என்றும் கோரி, பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருக்கிறார்.

பிரதமருக்கு கடிதம்

தமிழகத்தில் நிலவும் வறட்சிநிலைமை குறித்த ஒரு விரிவான அறிக்கையை மாநில நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கே.சத்யகோபால், வருவாய்துறை செயலாளர் பி.சந்திரமோகன் ஆகியோர் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து நிதி உதவி கோரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தோடு சேர்த்து பிரதமர் அலுவலகத்தில் வழங்கினார்கள்.

இந்த அறிக்கையின் ஒரு நகல் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சக செயலாளர் எஸ்.கே.பட்நாயக்கிடமும் வழங்கப்பட்டது.

பிரதமருக்கு முதல்–அமைச்சர் எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு:–

வறட்சி

தமிழகத்தில் நிலவும் வறட்சிநிலையை சமாளிக்க நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு நிதி மற்றும் மத்திய நிதிகளிடமிருந்து உதவி கோரும் வகையில், தமிழ்நாட்டின் மிக விளக்கமான ஒரு அறிக்கையோடு, இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன். தமிழ்நாடு தன்னுடைய தண்ணீர் தேவைக்காக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழையைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறது.

2016–ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை மிகவும் தாமதமாக பெய்யத்தொடங்கியது. 30.10.2016 அன்றுதான் இந்த மழை பெய்யத்தொடங்கியது. வானிலை ஆராய்ச்சி நிலையம், பருவமழையில் வழக்கமான பருவமழை பெய்யும் என்று முன்கூட்டியே அறிவித்திருந்தாலும், மாநிலத்தில் மிகக்குறைவான மழையே பெய்தது. வழக்கமாக 440.4 மி.மீ. மழை பெய்யவேண்டியதற்கு பதிலாக, 168.3 மி.மீ. வடகிழக்கு பருவமழையே பெய்தது. வழக்கமான மழையைவிட 62 சதவீதம் பற்றாக்குறை. இதற்கு முன்னதாக தென்மேற்கு பருவமழையில் 20 சதவீதம் குறைவாகத்தான் பெய்தது.

இதுமட்டுமல்லாமல், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் முதல் மற்றும் இரண்டாம் வாரத்தில் நாடா, வார்தா புயல் வீசும், அது பரவலாக மழையைக் கொண்டுவரும் என்று கணித்திருந்தது. நாடா புயலால் எதிர்பார்த்த அளவு மழை இல்லை. வார்தா புயலும் 3 மாவட்டங்களை பாதிக்கும் அளவிலும் கடும் புயலாகத்தான் வீசியதே தவிர, மழை மிகவும் குறைவாகவே பெய்தது.

குறைவான மழை

32 மாவட்டங்களிலும் மிகவும் குறைவான மழையாக 35 சதவீதம் முதல் 81 சதவீதம் பற்றாக்குறையாகவே பெய்தது. மேலும், காவிரி நீர் நடுவர் மன்ற இறுதி தீர்ப்புப்படி, கர்நாடகா தண்ணீர் திறந்துவிடாததும் வறட்சி நிலையை மேலும் மோசமாக்கியது. 2016–ம் ஆண்டு ஜூன் 1 முதல் டிசம்பர் 31 வரை 179 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக மாநிலத்தால் திறந்துவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 66.5 டி.எம்.சி. தண்ணீரே திறந்தவிடப்பட்டது. அதாவது, 112.5 டிஎம்.சி. குறைவாக திறந்துவிடப்பட்டது. இதன்விளைவாக காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் தரும் மேட்டூர் அணையில் இருந்து மிகக்குறைவாகவே தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்காரணமாக ஒருபோகம்கூட நெல்சாகுபடி செய்ய முடியவில்லை.

இந்த நிலைமை குறித்து 3.1.2017–ல் நான் ஆய்வு நடத்தினேன். 2016 வறட்சி மேலாண்மை குறிப்பு வழிகாட்டுதலின் அடிப்படையில், வறட்சிநிலை குறித்து விரிவாக ஆய்வு செய்ய உத்தரவிட்டேன். அதிகாரிகள் நிலைமைகளை தீவிரமாக ஆய்வு செய்ய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட மாவட்ட குழுக்களை அமைத்து, அனைத்து இடங்களையும் பார்வையிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள சூழ்நிலைகளை மதிப்பிட்டு, தங்கள் பரிந்துரைகளுடன் அரசுக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தேன்.

குழுக்கள் ஆய்வு

மாவட்ட அளவிலான இந்த குழுக்கள், அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, தங்கள் அறிக்கைகளை 9.1.2017 அன்று தாக்கல் செய்தன. மாநிலத்தில் உள்ள 16 ஆயிரத்து 682 வருவாய் கிராமங்களில், 13 ஆயிரத்து 305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள உணமையான நிலைமை குறித்த ஆய்வு 1,564 கிரமங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில், 87 சதவீத பகுதிகளில் 50 சதவீதத்துக்குமேல் கடுமையான வறட்சி பெரும்பான்மையான கிராமங்களில் நிலவியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வருங்காலங்களில் வடகிழக்கு பருவமழை முடிந்தநிலையில், இன்னும் நிலைமை மிகவும் மோசமாகும். மாநிலத்தில் உள்ள நிலைமையை கருத்தில் கொண்டும், 2016 வறட்சி மேலாண்மை குறிப்பு வழிமுறைகளின் அடிப்படையிலும், இந்த மாநிலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று 10.1.2017 அன்று அறிவிக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், நீர்நிலைகளில் தண்ணீரின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

விவசாயிகளுக்கு நிவாரணம்

மாநிலத்தில் உள்ள 15 பெரிய அணைக்கட்டுகளின் மொத்த கொள்ளளவு 198.384 டி.எம்.சி. ஆகும். ஆனால், 31.12.2016 அன்று தண்ணீர் இருப்பு 25.742 டி.எம்.சி. ஆகும். அதாவது, கடந்த ஆண்டு இதே நாளில் 126.233 டி.எம்.சி. தண்ணீர் இருந்திருக்கிறது. சென்னை நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் 4 ஏரிகளின் கொள்ளளவு கடந்த 31.12.2016 அன்று 1.966 டி.எம்.சி. தான். அதற்கு முந்தைய ஆண்டு இதே நாளில் 10.339 டி.எம்.சி. தண்ணீர் இருந்திருக்கிறது.

பருவமழை பொய்த்ததன் காரணமாக பயிர்சேதம் ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமும், மாநிலத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க உடனடியாக மேற்கொள்ளவேண்டிய தற்காலிக நடவடிக்கைக்காகவும் நிவாரணம் வழங்கவேண்டி இருக்கிறது. மேலும், கால்நடைகள் தீவனத்துக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டி இருக்கிறது.

ரூ.39,565 கோடி தேவை

விவசாய கூலிகளின் வாழ்வாதாரத்துக்காக, அவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டத்துக்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. இதற்காக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.39 ஆயிரத்து 565 கோடி ஒதுக்க கேட்டுக்கொள்கிறேன்.

அவசர நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த மாநிலத்தில் உள்ள பயிர் பாதிப்புகள், குடிநீர் பற்றாக்குறை எந்த அளவில் இருக்கிறது என்று ஆய்வு செய்ய மத்திய அரசாங்கம் ஒரு குழுவை அனுப்பவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த 2015–ம் ஆண்டு தமிழ்நாட்டில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. வார்தா புயலால் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.

எனவே, தமிழக அரசிடமுள்ள மாநில பேரிடர் மீட்பு நிதி, இப்போதுள்ள நிலைமையை சமாளிக்க போதுமான அளவு இல்லை. உடனடி நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து உதவி அவசர தேவையாக இருக்கிறது. எனவே, வறட்சி நிலையை சமாளிக்க உடனடி நிவாரணத்துக்கும், மறுவாழ்வு நடவடிக்கைக்கும் தமிழக அரசுக்கு தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து உடனடியாக ரூ.1,000 கோடி ஒதுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கண்டவாறு அந்த கடிதத்தில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story