புதிய கட்சி தொடங்குவாரா? எதிர்கால திட்டம் குறித்து தீபா இன்று காலை அறிவிக்கிறார் ‘உங்களுக்காகவே நான் இருக்கிறேன்’ என்று பேச்சு


புதிய கட்சி தொடங்குவாரா? எதிர்கால திட்டம் குறித்து தீபா இன்று காலை அறிவிக்கிறார் ‘உங்களுக்காகவே நான் இருக்கிறேன்’ என்று பேச்சு
x
தினத்தந்தி 16 Jan 2017 8:53 PM GMT (Updated: 16 Jan 2017 8:53 PM GMT)

புதிய கட்சி தொடங்குவது சம்பந்தமான புதிய அறிவிப்பை ஜெ. தீபா இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடுகிறார்.

சென்னை,

‘உங்களுக்காகவே நான் இருக்கிறேன்’ என்று ஆதரவாளர்கள் மத்தியில் ஜெ.தீபா பேசினார்.

ஜெ.தீபாவுக்கு ஆதரவு

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்–அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த மாதம் (டிசம்பர்) 5–ந்தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த வரும் பலரும் சென்னை தியாகராயநகரில் உள்ள ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா வீட்டிற்கும் வந்த வண்ணம் உள்ளனர்.

அரசியலில் ஈடுபடும்படி அவரை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக அவரது வீடு முன்பு தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் மத்தியில் ஜெ.தீபாவும் பேசி வருகிறார். ஜெ. தீபாவின் ஆதரவாளர்கள் நடிகர் ஆனந்தராஜை நேற்று முன்தினம் சந்தித்து ஆதரவு திரட்டினர்.

நேற்றும் ஜெ.தீபா வீடு முன்பு ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ஜெ.தீபாவை வாழ்த்தி கோ‌ஷமிட்டனர். அவர்கள் மத்தியில் ஜெ.தீபா பேசியதாவது:–

உங்களுக்காகவே நான் இருக்கிறேன். உங்களின் எதிர்பார்ப்புக்கு போலவே என் பொது வாழ்வு அமையும். நாளை முதல் (இன்று) எம்.ஜி.ஆர். நலப்பணிகளை தொடங்க உள்ளேன். அதற்கு உங்கள் மேலான ஆதரவு எனக்கு தேவை.  இவ்வாறு அவர் பேசினார்.

அறிவிப்பு

ஜெ.தீபா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு தனது இல்லத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் புதிய கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஜெ.தீபா வீட்டில் இருந்து நிருபர்களுக்கு நேற்று நிகழ்ச்சி நிரல் அழைப்பு கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் கூறப்பட்டுள்ளதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு காலை 6.30 மணிக்கு ஜெ.தீபா சென்று அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, எதிர்கால திட்டம் குறித்து சபதம் எடுக்கிறார்.

புதிய கட்சி?

காலை 11 மணிக்கு தீபா தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, பேட்டி அளிக்கிறார். மாலை 4 மணிக்கு தனது இல்லத்திலேயே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர் தனது இல்லத்திற்கு வரும் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளை கேட்கிறார்.  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெ.தீபா, அரசியல் கட்சி அல்லது பேரவையை தொடங்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று அவரது வீடு முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.


Next Story