திவாகரன் பேசியதை கட்சித்தொண்டர்கள் வரவேற்கிறார்கள்: சுய ஆதாயம் அடைவதற்காக கே.பி.முனுசாமி குறை கூறுகிறார்; 6 அமைச்சர்கள் கடும் தாக்கு


திவாகரன் பேசியதை கட்சித்தொண்டர்கள் வரவேற்கிறார்கள்: சுய ஆதாயம் அடைவதற்காக கே.பி.முனுசாமி குறை கூறுகிறார்; 6 அமைச்சர்கள் கடும் தாக்கு
x
தினத்தந்தி 16 Jan 2017 9:05 PM GMT (Updated: 16 Jan 2017 9:05 PM GMT)

சுய ஆதாயம் அடைவதற்காக அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குறை கூறுகிறார் என்று 6 அமைச்சர்கள் பேட்டி அளித்தனர்.

சென்னை,

ஜெயலலிதாவுக்கு பிறகு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கருத்து கூறினார்.

இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் நிருபர்களுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டி வருமாறு:–

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறகு பொதுச்செயலாளராக சசிகலா, அ.தி.மு.க.வை முழுமையாக கட்டிக்காத்து எங்களை வழிநடத்தி செல்கிறார். 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்தவர் அவர்.

காட்டிக்கொடுக்கிறார்

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, அமைச்சராக, எம்.எல்.ஏ.வாக, எம்.பி.யாக மற்றும் அ.தி.மு.க.வின் பல பொறுப்பில் இருந்த கே.பி.முனுசாமி, தற்போது கட்சியை காட்டிக்கொடுக்கும் வகையிலும் துரோகம் இழைக்கும் வகையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.

பல்வேறு பொறுப்பில் இருந்து பலனடைந்தவர் அவர். கட்சிமீதோ அல்லது யார்மீதாவதோ குறை இருந்திருந்தால் அவர் முறையாக அதை பொதுச்செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு பத்திரிகை மூலமாக கட்சியை காட்டிக்கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

துரோகி பட்டியல்

யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, ஏதோ ஒரு சுய ஆதாயத்துக்காக உள்நோக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார், அந்த வகையில் துரோகிகள் பட்டியலில் இணைந்துவிட்டார்.

ஜெயலலிதாவினால் அமைச்சராக்கப்பட்ட கே.பி.முனுசாமி, தனது சொந்த மாவட்டத்தில் எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வக்கில்லாதவர். சட்டமன்ற தேர்தலில் 3–ம் இடத்துக்கு தள்ளப்பட்டவர். அ.தி.மு.க.வில் உள்ள யாரைப்பற்றியும் பேச அவருக்கு தகுதி கிடையாது.

சாதிக்காக விட்டுக்கொடுத்தவர்

அன்று சாதி உணர்வில், கட்சி உணர்வில்லாமல், எம்.பி. தேர்தலில் வேறொருவரை ஜெயிக்கும்படி விட்டுக் கொடுத்தவர் கே.பி.முனுசாமி. அந்த துரோகத்துக்காகத்தான் அமைச்சர் பதவியில் இருந்து அவரை ஜெயலலிதா நீக்கினார்.

அவர் யாரை குறை கூறுகிறாரோ, அவர்தான் ஜெயலலிதா மற்றும் கட்சிக்கு சோதனை வந்த காலத்தில், கட்சியை காப்பாற்றுவதிலும் அவருக்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருந்தவர். பதவியில் இல்லாத இப்போது பேசும் கே.பி.முனுசாமி, பதவியில் இருக்கும்போதே பேசியிருக்கலாமே. இவரை அ.தி.மு.க. தொண்டர்கள் மன்னிக்கமாட்டார்கள்.

அன்று வாழ்த்தினார்

பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட பிறகு வீட்டுக்கு சென்று வாழ்த்து சொன்னவர் கே.பி.முனுசாமி. அதன் பிறகு 20 நாட்களில் என்ன மனமாற்றம் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது? யாரால் எதற்காக அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

இப்போது பதவி, அதிகார ஆசையால் தூண்டப்பட்டு இப்படி பேசுகிறார். சசிகலாவின் தம்பி திவாகரன் தனது பேச்சில் எந்த இடத்திலும் தவறாக பேசவில்லை. திவாகரன் என்ன பொறுப்பில் இருக்கிறார் என்பது பற்றி நான் இப்போது பேசவில்லை.

பச்சோந்தி

அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தால் அது தனது உடல் மீதுதான் நடக்கும் என்று அவர் பேசியிருக்கிறார். இதை வரவேற்கிறோம். கட்சியை அவர் குறைத்துப் பேசவில்லை. இதில் கே.பி.முனுசாமி என்ன குறையை கண்டறிந்தார்? அ.தி.மு.க.வை காப்பாற்றுவேன் என்று யார் சொன்னாலும் அவர் அந்தக் கட்சியின் தொண்டர்தான். இதற்கு அவர் எந்தப் பொறுப்பிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கட்சி இரண்டாக பிரிந்தபோது ஜெயலலிதா, சசிகலாவுடன் இருந்து கட்சியைக் காப்பாற்ற திவாகரன் பாடுபட்டிருக்கிறார். இது கே.பி.முனுசாமிக்கும் தெரியும். இன்று கே.பி.முனுசாமி பேசுவது ஆதாயத்துக்காகத்தான். பச்சோந்தியாகிவிட்டார் அவர்.

சசிகலாவின் முடிவு

அவர் அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் அல்ல. இவர் சொல்வது, அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்து அல்ல. இன்னொரு இடத்துக்குப் போக அவர் தயாராகிவிட்டார். அதற்காக குறை சொல்கிறார். யாரை திருப்திப்படுத்த அவர் இப்படி பேசுகிறார் என்பதை காலம் சொல்லும். ஓரங்கட்டப்பட்டு தூக்கி எறியப்பட்ட விரக்தியில் கே.பி.முனுசாமி பேசுகிறார்.

கட்சிக்குள் சசிகலாவின் குடும்பத்தினர் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டால், சசிகலா என்ன முடிவு எடுக்கிறாரோ அதை அனைத்துத் தொண்டர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.

சசிகலா முதல்–அமைச்சர் ஆகவேண்டும்

முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சசிகலா முதல்–அமைச்சர் ஆக வேண்டும் என்பது தொண்டன் என்ற முறையில் எங்கள் தனிப்பட்ட கருத்து.

ஆட்சியும், கட்சியும் ஒருவரிடம் இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. குறிப்பிட்ட காலம் வரும்போது அதுபற்றி கட்சி அப்போது முடிவு செய்யும்.

சசிகலாவின் குடும்பத்தினர் யாரும் எந்தப் பதவிக்கு வந்தாலும் எந்தப் பிரச்சினையும் இருக்காதா என்று நீங்கள் கேட்டால், திறமை யாரிடம் இருக்கிறதோ அவர் யாரென்றாலும் அ.தி.மு.க.வில் பதவிக்கு வரலாம். அவர் எந்தக் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, திறமை இருந்தால் மரியாதை கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.  இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஓ.எஸ்.மணியன், காமராசு, உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு ஆகியோரும் கே.பி.முனுசாமிக்கு கண்டனம் தெரிவித்து பேட்டி அளித்தனர்.


Next Story