பெங்களூருவில் சம்பவம் திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது திராவகம் வீச்சு


பெங்களூருவில் சம்பவம் திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது திராவகம் வீச்சு
x
தினத்தந்தி 17 Jan 2017 9:30 PM GMT (Updated: 17 Jan 2017 7:42 PM GMT)

பெங்களூருவில், திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது திராவகம் வீசப்பட்டது.

பெங்களூரு,

பெங்களூருவில், திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது திராவகம் வீசப்பட்டது. இதுதொடர்பாக நர்சை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமணத்துக்கு மறுப்பு

பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் வசித்து வருபவர் லிதியா(வயது 26). தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவரும், துணி வியாபாரியான ஜெயக்குமாரும்(30) கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லிதியா, ஜெயக்குமாரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.

அப்போது, ஜெயக்குமார் திருமணத்துக்கு மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, அவர் லிதியாவை சந்திப்பதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு தொடர்பாக இருவரிடமும் ஸ்ரீராமபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி உள்ளனர்.

திராவகம் வீச்சு

இதற்கிடையே, லிதியாவை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய ஜெயக்குமார் முயற்சித்ததாக தெரிகிறது. இதை அறிந்து லிதியா அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் தனது மோட்டார் சைக்கிளில் விஜயநகர் பைப்லைனில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து சென்ற லிதியா, ஜெயக்குமார் மீது திராவகத்தை(ஆசிட்) வீசினார். மேலும், ஜெயக்குமாரின் முகத்தில் பிளேடால் சரமாரியாக கீறிவிட்டு லிதியா சென்றுவிட்டார். இதனால், ஜெயக்குமாரின் முகம் ரத்த வெள்ளத்துடன் வெந்துப்போனது.

நர்சு கைது

இதையடுத்து, ஜெயக்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும், ஜெயக்குமார் சார்பில் விஜயநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று லிதியாவை கைது செய்தனர்.

விசாரணையில் லிதியா போலி பதிவு எண்ணை பொருத்திய ஸ்கூட்டரில் சென்று ஜெயக்குமார் மீது திராவகம் வீசியது தெரியவந்தது. தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

காதலித்து திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது திராவகம் வீசிய தனியார் மருத்துவமனை நர்சு கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story