ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி:அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை


ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி:அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை
x
தினத்தந்தி 18 Jan 2017 2:43 PM GMT (Updated: 18 Jan 2017 2:43 PM GMT)

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக சென்னையில் உள்ள 31 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு பல்வேறு தரப்பில் ஆதரவு பெருகி வருகிறது. சென்னையில் முக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், மென்பொருள் தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். பீட்டாவிற்கு தடை விதிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

சென்னை மெரினாவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மெரினாவில் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

சென்னை மெரினாவில் மட்டும் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் இளைஞர்கள் குவிந்து உள்ளனர். சென்னை, வேலூர், திருச்சி, கோவை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி என தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் சிலர் மண்ணில் புதைந்து கொண்டு போராட்டம் நடத்துக்கின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக சென்னையில் உள்ள 31 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அனைத்து கல்லூரிகளிலும், நிர்வாகங்களே விடுமுறையை அறிவித்துள்ளது.

Next Story