ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருப்பதற்கு ‘காங்கிரசும், தி.மு.க.வும் செய்த துரோகம் தான் காரணம்’; பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு


ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருப்பதற்கு ‘காங்கிரசும், தி.மு.க.வும் செய்த துரோகம் தான் காரணம்’; பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Jan 2017 9:16 PM GMT (Updated: 18 Jan 2017 9:16 PM GMT)

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருப்பதற்கு, காங்கிரசும், தி.மு.க.வும் செய்த துரோகம் தான் காரணம் என பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

மத்திய நெடுஞ்சாலை, சாலை போக்குவரத்து மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

காங்கிரஸ் – தி.மு.க காரணம்

ம.நடராசன் குடும்ப அரசியல் செய்வேன் என கூறியுள்ளார். அது அவர்களின் விருப்பம். ஆனால் தமிழக மக்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் ஏன் கொண்டு வரவில்லை என்று அரசியல் கட்சியினர் கேட்பது முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது. ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருப்பதற்கு காங்கிரஸ் – தி.மு.க. செய்த துரோகம் தான் காரணம்.

பீட்டாவை கொண்டு வந்தவர் ஆ.ராசா

பீட்டா அமைப்பை தமிழகத்துக்கு கொண்டு வந்தவர் தி.மு.க.வின் ஆ.ராசா. தி.மு.க.வினர் அதைப்பற்றி இப்போது பேசுகிறார்களா?

மாணவர்களின் போராட்டத்தால் மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடியும் இல்லை. மாணவர்கள் இதை நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். தமிழக மாணவர் சக்தி போல் எந்த மாநிலத்திலும் இல்லை.

ஆனால், அதில் சில திட்டமிட்ட சதிகளும் நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மாநில அரசும் கவனமாக இருக்க வேண்டும்.

நூறு நியாயங்கள் கற்பிக்க முடியும்

‘மானங்கெட்டவங்க’ போன்ற வார்த்தைகளை ஸ்டாலின் போன்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது. இதே வார்த்தைகளை அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களை நாம் கூறினால் என்னவாகும். பா.ஜ.க.வில் மானங்கெட்டவர் என்று மோடியை நிரூபிப்பதற்கு எதுவும் கிடையாது.

அதே வார்த்தைகளை தி.மு.க. தலைவர்களை பற்றி நான் சொன்னேன் என்றால், நூறு நியாயங்கள் கற்பிக்க முடியும். எனவே, தயவு செய்து இது போன்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தாதீர்கள்.

அ.தி.மு.க. வெற்றிடத்தை நிரப்ப பா.ஜ.க. பார்க்கிறது என்று கூறினால், அதனை நிரப்பித்தான் ஆக வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்கள் அவர்களாக வந்து பா.ஜ.க.வில் சேர்கிறார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story