ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை நாளை கூட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின்


ஜல்லிக்கட்டு போட்டி நடத்த  சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை நாளை கூட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 19 Jan 2017 8:30 AM GMT (Updated: 19 Jan 2017 8:30 AM GMT)

நாளைக்கே சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான சட்டபூர்வ நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

சென்னை,

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது” என்று பிரதமர் நரேந்திரமோடி தமிழக முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் இன்று தெரிவித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இப்படியரு சூழ்நிலை உருவாகக் கூடாது என்பதற்காகவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும், போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரநிதிகளையும் அழைத்துக் கொண்டு சென்று பிரதமரை சந்தித்து முறையிடுமாறு தமிழக முதலமைச்சருக்கு நேற்றைய தினம் கோரிக்கை விடுத்தேன்.

ஆனால் பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தினை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கேட்காமல் தான் மட்டும் தனியாகச் சென்று சந்தித்ததன் விளைவால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஒரு அவசரச் சட்டத்தைக் கூட மத்திய அரசு நிறைவேற்ற இயலாது என்று மறுத்து விட்டது.
அனைத்து கட்சி பிரதிநிதிகளையும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்றிருந்தால் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை பிரதமரிடம் வெளிப்படுத்தியிருக்க முடியும்.

தமிழர்களின் கலாச்சாரத்தைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இன்றைக்கு மத்திய- மாநிலஅரசுகளின் மெத்தனத்தைப் பார்த்து கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்.

சென்னை மெரினா கடற்கரை மட்டுமின்றி தமிழக மெங்கும் தன்னெழுச்சியுடன் மாணவர்களும், மக்களும் நடத்தும் போராட்டத்தின் உணர்வுகளை மத்திய அரசு உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. மத்திய அரசும் கைவிரித்து விட்ட நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த அசாதாரண சூழ்நிலை பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். அதனைத் தொடர்ந்து நாளைக்கே சிறப்பு சட்டமன்ற கூட்டத்தையும் கூட்டி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான சட்டபூர்வ நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையையும் பெறலாம். பிரதமர் நரேந்திர மோடி, “மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவி செய்யும்” என்று முதல்வருடான சந்திப்பில் தெரிவித்ததாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமரின் இந்த உறுதிமொழியை துணைக்கு வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஜல்லிக்கட்டு தொடர்பாக 7.5.2014 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பிரபல சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து, அந்த தீர்ப்பில் திராவிட முன்னேற்றக் கழக அரசின் “ஜல்லிக்கட்டு நெறிமுறை” சட்டத்தில் ஏதேனும் குறைகள் சுட்டிக் காட்டப்பட்டிருப்பின் அதையும் நிவர்த்தி செய்து புதியதொரு ஜல்லிக்கட்டு நெறிமுறைப்படுத்தும் சட்டத்தை, தமிழக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெற முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story