ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைகிறது: ஆதார் அட்டை, ரே‌ஷன் கார்டுகளை ஒப்படைப்போம் என அறிவிப்பு


ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைகிறது:  ஆதார் அட்டை, ரே‌ஷன் கார்டுகளை ஒப்படைப்போம் என அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Jan 2017 9:45 PM GMT (Updated: 19 Jan 2017 7:55 PM GMT)

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டம் தீவிரம் அடைகிறது.

சென்னை,

ஆதார் அட்டை, ரே‌ஷன் கார்டு ஆகியவைகளை ஒப்படைப்போம் என அறிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக போராட்டம்

ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 17–ந் தேதி மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் மாலையில் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் போராட்டம் விடிய விடிய நடைபெற்றதுடன் 3–வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

போராட்டம் பற்றிய தகவல் சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ–மாணவிகளுக்கும் பரவியதையடுத்து அவர்களும் மெரினா கடற்கரைக்கு லாரி, டெம்போ, பஸ், வேன்களில் புறப்பட்டு வந்தனர். கல்லூரி மாணவ–மாணவிகள் குவிந்ததால் மெரினாவில் எங்கும் மனித தலைகளாக காட்சியளித்தது.

வாடிவாசல் திறக்கும்வரை

இதனால் போராட்டத்தின் வேகம் சூடுபிடித்தது. காமராஜர் சாலையே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் போலீசாருடன் இணைந்து சாலைக்கு வரும் மாணவர்களை போராட்டக்களத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

கடந்த 2 நாட்களாக போராட்டக்குழுவினரிடம் போலீசார் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தினாலும், வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்ற அறிவிப்பை மத்திய–மாநில அரசு தரப்பில் இருந்து எங்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும்வரை நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் என்று தெரிவித்துவிட்டனர்.

போராட்டம் தீவிரம்

முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பில் நல்ல முடிவு கிடைக்கும் என்று போராட்டக்காரர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதால் தற்போது எதுவும் செய்ய இயலாது என்று தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து போராட்டக்குழுவினர் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். போராட்டக்குழுவினர் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசும்போது, ‘‘முதல்–அமைச்சர், பிரதமர் சந்திப்புக்கு பிறகாவது ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எந்த முடிவும் கிடைக்கவில்லை. இருப்பினும் நம்முடைய கோரிக்கையான வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அந்த அறிவிப்பு வரும்வரை நம்முடைய போராட்டத்தை தொடருவோம்’’ என்றனர்.

கமி‌ஷனர் பார்வையிட்டார்

இதற்கிடையில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், விவேகானந்தர் இல்லத்துக்கு இரண்டு முறை வந்து போராட்டம் நடைபெறும் இடத்தையும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும் விவேகானந்தர் இல்லத்தின் மாடியில் இருந்து பார்வையிட்டார். அவர் போலீஸ் அதிகாரிகளிடம் மட்டும் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் போராட்டக்குழுவினர் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் 2 முறை பேசினார்கள். முதலில் மயிலாப்பூர் துணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணனிடமும், அடுத்து கூடுதல் கமி‌ஷனர் தாமரைகண்ணனிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆதார் அட்டை, ரே‌ஷன்கார்டு

அவசர சட்டம் பிறப்பிக்க இயலாது என்று பிரதமர் கூறியதை தொடர்ந்து போராட்டக்குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாங்கள் 3–வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் எங்களுக்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. முதல்–அமைச்சர், பிரதமர் சந்திப்பில் சரியான முடிவு எதுவும் கிடைக்கவில்லை. வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் மட்டுமே நாங்கள் இந்த இடத்தைவிட்டு புறப்படுவோம். அதுவரைக்கும் நாங்கள் புறப்படமாட்டோம்.

மாபெரும் போராட்டமாக நாங்கள் நடத்திக்கொண்டு இருக்கிறோம். இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மக்கள் போராட்டமாக மாறப்போகிறது. எங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரே‌ஷன்கார்டு ஆகியவற்றை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கொடுத்து நாங்கள் இந்தியாவில் வாழ தகுதி இல்லாதவர்கள் என்பதை வெளிப்படுத்தப்போகிறோம்.

கருப்பு பேட்ஜ் அணியுங்கள்

அரசு போக்குவரத்து பணியாளர்கள், ஆட்டோ மற்றும் கால்டாக்சி டிரைவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடும் எங்களை ஆதரித்து ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு ஆதரவு தாருங்கள். அப்போது தான் இந்த மாபெரும் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும். போராட்டம் தொடரும்.

போலீசாருக்கு ஒரு வேண்டுகோள். 3 நாட்களாக நல்ல ஆதரவு தந்தீர்கள். எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று ஒரு நாள் கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து உங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டுகிறோம். உங்களுக்கு எங்கள் இளைஞர்கள் சார்பிலும், தமிழர்கள் சார்பிலும் நன்றியை தெரிவிக்கிறோம்.

ஆதரவு பெருகுகிறது

எங்களுக்கு ஐ.டி. பணியாளர்கள், வணிகத்துறையினர், லாரி உரிமையாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள், ஆசிரியர் சங்கத்தினர், மருத்துவர்கள், சினிமாத்துறையினர் ஆதரவுகள் தெரிவித்துவிட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகுகிறது.  இவ்வாறு அவர் கூறினர்.


Next Story