சென்னைக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து 540 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்படுகின்றன


சென்னைக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து 540 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்படுகின்றன
x
தினத்தந்தி 19 Jan 2017 10:45 PM GMT (Updated: 19 Jan 2017 8:33 PM GMT)

சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து 540 ஜெர்சி மாடுகள் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளன.

சென்னை,

இதில் முதல் கட்டமாக 60–க்கும் மேற்பட்ட ஜெர்சி இன பசுக்கள் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி

தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’வை கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உள்நாட்டு காளை இனங்களை அழித்து வெளிநாட்டு காளைகளை இந்தியாவில் உருவாக்க ‘பீட்டா’ அமைப்பு முயற்சிப்பதாகவும், இதனால்தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக அந்த அமைப்பு குரல் எழுப்புவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து ஜெர்சி இன மாடுகள் கொண்டுவரப்படுகின்றன.

ஜெர்சி பசுக்கள் சென்னை வந்தன

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறைக்காக சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு முதல் கட்டமாக 60–க்கும் மேற்பட்ட ஜெர்சி இன பசுக்கள் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் கொல்கத்தா வழியாக கொண்டுவரப்பட்டு உள்ளன.

விமானத்தில் கொண்டு வரும் போது, அந்த மாடுகள் வீடு போன்ற மரப்பெட்டிகளில் நிற்க வைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு மரப்பெட்டியிலும் மூன்றுக்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன.

இதுகுறித்து இந்திய விமானநிலையங்கள் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

540 மாடுகள்

தேசிய பால்வள அபிவிருத்தி வாரியத்தின் அனுமதியுடன் வெளிநாட்டில் இருந்து மாடுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில் 1,000 ஜெர்சி இன பசுக்களையும், காளைகளையும் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் 540 மாடுகள் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளன. மற்ற மாடுகள் கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப்படும்.

சென்னைக்கு தற்போது 60–க்கும் மேற்பட்ட ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. மீதியுள்ள மாடுகள் இன்னும் 2 மாதங்களில் இறக்குமதி செய்யப்படும்.

பால் உற்பத்தியை பெருக்க...

பால் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் இனவிருத்திக்காக வெளிநாட்டு மாடுகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். அந்த மாடுகளை கொண்டு வருவதற்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் போதிய வசதியுடன் உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story