ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரமாக மாறியது ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு


ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரமாக மாறியது  ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 23 Jan 2017 7:55 AM GMT (Updated: 23 Jan 2017 7:55 AM GMT)

சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரமாக மாறியது ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் 50 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தது

சென்னை,

சென்னையில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டம் இன்று கலவரமாக மாறியது. திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ் பகுதிகளில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பல பகுதிகள் போர்க்களமாக மாறியது.

வன்முறையின் உச்சக் கட்டமாக ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. பகல் 11.30 மணி அளவில் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் முன்பு சுமார் 500 பேர்  அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அங்கு திடீரென மேலும் சிலர் திரண்டனர்.அப்போது ஐஸ்அவுஸ் பகுதியில் போலீசார் எண்ணிக்கை குறைவாக இருந் தது. உதவிக் கமிஷனர் ஒருவர் தலைமையில் 20 போலீசார்தான் அங்கு இருந்தனர். இதனால் போராட்டக்காரர்களை சமாளிக்க இயலவில்லை.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட போராட்டக்காரர்கள் வனமுறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் தயாராக கொண்டு வந்திருந்த பெட்ரோல் குண்டுகளை போலீஸ் நிலையம் மீது குறி வைத்து வீசினார்கள்.

இதனால் போலீஸ் நிலையம் உள்ளே இருந்த போலீசார் அங்கிருந்து வெளியேறி ஓடினார்கள். அப்போது ஒரு மர்ம கும்பல் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தை திடீரென வெளிப்பக்கமாக இழுத்துப் பூட்டினார்கள்.

பிறகு தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குணடுகளை போலீஸ் நிலையத்துக்குள் வீசி எறிந்தனர். பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறியதால் போலீஸ் நிலையம் தீப்பிடித்து எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தும் உடனடியாக அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கடற் கரை சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பெசன்ட் ரோடு வழியாக ஓடி வந்தனர்.

அந்த ரோட்டின் கடைசி சந்திப்பில்தான் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் உள்ளது. போலீசார் அதிக அளவில் வந்ததும் வன்முறை கும்பல் கல்வீசியபடி தப்பி சென்றது.
அவர்களை போலீசார் விரட்டிச் சென்றனர். ஆனால் யாரும் சிக்கவில்லை. வன்முறை செய்த மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டது.

வன்முறை கும்பல் வைத்த தீயால் போலீஸ் நிலையம் கொழுந்து விட்டு எரிந்தது. தீ வைப்பில் ஈடுபட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 50 பைக்குகளை கீழே தள்ளி பெரிய கற்களை தூக்கி போட்டனர். பிறகு மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தனர். இதில் 50 பைக்குகளும் எரிந்து நாசமானது.அது போல போலீஸ் நிலையத்துக்குள் இருந்த ஆவணங்களும் எரிந்து நாசமானது.

இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் எவ்வளவோ போராடியும் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் முழுமையாக எரிந்து நாசமானது. அது எலும்புக்கூடு போல காட்சி அளித்தது.
தீ வைத்து எரிக்கப்பட்ட 50 மோட்டார் சைக்கிள்களும் கரிக்கட்டை போல மாறி விட்டன.

தீக்கிரையாக்கப்பட்ட போலீஸ் நிலையத்தை அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். இதனால் கூட்டம் கூடியது. ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.அவர்களை போலீ சார் எச்சரித்து அப்புறப்படுத்தினார்கள். போலீசார் தவிர வேறு யாரும் அங்கு நிற்க கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையே போலீஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் திடீரென சிலர் கும்பலாக வந்தனர். அவர்களை போலீசார் ஓடிச் சென்று விரட்டியடித்தனர். போலீஸ் நிலைய சந்திப்பில் 4 சந்திப்பு சாலைகளிலும் அதிக போலீசார் குவிக்கப்பட்டனர். கூடுதல் கமிஷனர் சேஷசாயி ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் காரணமாக ஐஸ்அவுஸ் மட்டுமின்றி திருவல்லிக்கேணி, மெரீனா கடற்கரை பகுதிகளில் பதட்டம் காணப்பட்டது. போலீஸ் நிலையம் இருக்கும் சாலையில் உள்ள என்.கே.டி. பள்ளிக்கூடத்துக்கு உடனடியாக விடுமுறை விடப்பட்டது.அனைத்து மாணவிகளும் அவசரம், அவசரமாக தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story