மதுவை ஒழிப்பது தான் தமிழக அரசின் முதல் பணியாக இருக்க வேண்டும்


மதுவை ஒழிப்பது தான் தமிழக அரசின் முதல் பணியாக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Feb 2017 4:45 PM GMT (Updated: 19 Feb 2017 12:59 PM GMT)

மதுவை ஒழிப்பது தான் தமிழக அரசின் முதல் பணியாக இருக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

லோக் அயுக்தா

2016–ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும் அதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால், அதன் பின்னர் 8 மாதங்கள் ஆகியும் லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற எந்த முயற்சியும் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை. இதிலிருந்தே ஊழலை ஒழிக்க தமிழக ஆட்சியாளர்கள் ஆர்வம் செலுத்தவில்லை என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.

மிடாஸ் ஆலை

ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த அ.தி.மு.க. அரசு, இதுவரை விற்பனை குறைவாக இருந்த 500 மதுக்கடைகளை மட்டுமே மூடியிருக்கிறது. அடுத்தகட்டமாக எத்தனை மதுக்கடைகள் எப்போது மூடப்படும்? என்பது குறித்து எந்த அறிவிப்பும் அரசுத் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. வாக்குறுதி அளித்த ஜெயலலிதாவும் மறைந்து விட்டார், வாக்குறுதியை மக்களும் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் அரசு இவ்வாறு செயல்படுகிறது.

அதுமட்டுமின்றி மது ஆலை அதிபரான சசிகலாவின் வழிகாட்டுதலில் செயல்படும் அரசு என்பதால், மிடாஸ் ஆலையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் இதுவரை மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க ஆணையிட்டால் கூட ஆச்சரியப்பட முடியாது.

மதுவை ஒழிக்க வேண்டும்

தமிழகத்தின் பிரச்சினைகளை நினைவில் கொண்டிருப்பது மட்டுமே முதல்–அமைச்சரின் பணி அல்ல. அவற்றை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் பெருந்தீமையாக மது உருவெடுத்துள்ள நிலையில், அதை ஒழிப்பது தான் அரசின் முதல் பணியாக இருக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மார்ச் 31–ந் தேதியுடன் மூட உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அந்த கெடுவுக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story