தமிழக சட்டசபை செயலாளரிடம் விளக்க அறிக்கை கோரினார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்


தமிழக சட்டசபை செயலாளரிடம் விளக்க அறிக்கை கோரினார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
x
தினத்தந்தி 19 Feb 2017 4:07 PM GMT (Updated: 19 Feb 2017 4:07 PM GMT)

தமிழக சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த அமளி குறித்து சட்டசபை செயலர் ஜமாலுதீனிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார்.

சென்னை,

சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக கடந்த வியாழக்கிழமை பதவி ஏற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சட்டசபையில் 15 நாட்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து தனது அரசுக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார். இதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. 

நேற்றைய கூட்டத்தில் திமுக தரப்பில் நேர்மையான முறையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக சபையை ஒத்திவைக்க நேரிட்டது. 

தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றிய பின் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என முக்கிய எதிர்கட்சியான தி.மு.க. மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர். அந்த கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு நேர்மையான முறையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் கடும் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் கூறியதை அவர்கள் பொருட்படுத்தாமல் கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.

அப்போது சில உறுப்பினர்கள் காகிதங்களை கிழித்து வீசினார்கள். அத்துடன் சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் மேஜையில் இருந்த புத்தகங்கள், கோப்புகளையும் தூக்கி வீசினார்கள். இதனால் சபையில் பெரும் ரகளை ஏற்பட்டது. எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அவை காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.  இதேபோல் தி.மு.க.வின் மற்றொரு தோழமை கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

அதன்பிறகு, நம்பிக்கை தீர்மானம் உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில் அ.தி.மு.க.வின் இரு அணிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே சபையில் இருந்தனர். பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது.

முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்மொழிந்த நம்பிக்கை தீர்மானத்தை 122 பேர் ஆதரித்துள்ளனர். (117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தாலே அறுதிப்பெரும்பான்மை கிடைத்துவிடும்). 11 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே தீர்மானம் வெற்றி பெற்று விட்டது என்று சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.

எதிர்கட்சிகள் இல்லாத நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி அதில் பழனிசாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.  

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை அமளி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில், ஸ்டாலின், பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில், மும்பை சென்றுள்ள கவர்னர் வித்யாசாகர் ராவ், சட்டசபை செயலாளரிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளார்.

ஆளுநர் வித்தாயாசாகர் ராவ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* வாக்கெடுப்பு நிகழ்வு குறித்து நாளை காலை 10 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும்.

* பேரவை நிகழ்வுகளை சமர்ப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story