நம்பிக்கை வாக்கெடுப்பு மீது மாற்று கருத்து கூற கவர்னருக்கு உரிமை இருக்கிறது; க. பாண்டியராஜன் பேட்டி


நம்பிக்கை வாக்கெடுப்பு மீது மாற்று கருத்து கூற கவர்னருக்கு உரிமை இருக்கிறது; க. பாண்டியராஜன் பேட்டி
x
தினத்தந்தி 19 Feb 2017 7:55 PM GMT (Updated: 19 Feb 2017 7:55 PM GMT)

சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மீது மாற்று கருத்து கூற கவர்னருக்கு உரிமை இருப்பதாக க.பாண்டியராஜன் கூறி உள்ளார்.

சென்னை,

சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நல்ல முடிவை எடுப்பார்

நேற்று(நேற்று முன்தினம்) சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி கவர்னரிடம் எடுத்து கூறினோம். ரகசிய வாக்கெடுப்பு, 5 நாட்கள் கழித்து வாக்கெடுப்பு நடத்துவது, அந்த 5 நாட்களில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தொகுதி மக்களை சந்திக்க செல்ல வேண்டும் என கோரினோம். அங்கு எந்த அளவு வன்முறை நடைபெற்றது. 100–க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் எப்படி சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனால், நேற்று(நேற்று முன்தினம்) அறிவிக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு அரசியல் சாசனப்படி எந்த விதிகளுக்கும் உட்படாதது. அதனால் கவர்னர் அங்கீகாரம் அளிக்க கூடாது. இன்னொரு நாள் வாக்கெடுப்பு நடத்த தேதி கொடுக்க வேண்டும் என கவர்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம்.

1–ந் தேதியே முடிவு அறிவிக்க வாய்ப்பு

எங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் தொகுதி பக்கம் சென்றுள்ளனர். அவர்களுக்கு தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தொகுதி பக்கம் சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்று உங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு மக்கள் என்ன மாதிரி வரவேற்பு தருகிறார்கள் என்பதையும் ஊடகங்கள் எடுத்து காட்ட வேண்டும் என விரும்புகிறேன்.

கவர்னரிடம் வைத்த முக்கியமான கோரிக்கையே, எம்.எல்.ஏ.க்கள் 5 நாட்கள் தொகுதி பக்கம் சென்று வந்து வாக்களிக்க வேண்டும் என்பது தான். தேர்தல் கமி‌ஷனிடம் நாங்கள் புகார் கொடுத்து இருக்கிறோம். அதற்கு 28–ந் தேதிக்குள் சசிகலா தரப்பில் இருந்து பதில் வரவில்லை என்றால் மார்ச் 1–ந் தேதியே முடிவினை அறிவிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. கண்டிப்பாக எல்லா நிகழ்வுகளும் நல்லபடியாக நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி: உங்கள் கோரிக்கைக்கு கவர்னர் என்ன பதில் கூறினார்?

பதில்: கவர்னர் கனிவுடன் எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பார் என நம்புகிறோம். இன்று(நேற்று) அவர் மும்பை செல்வதற்கு முன் எங்களுக்கு நேரம் ஒதுக்கியதே நல்ல சமிக்ஞையாக கருதுகிறோம்.

எந்தவித முகாந்திரமும் கிடையாது

கேள்வி: சட்டசபைக்குள் வன்முறை நடந்ததாக கூறுகிறீர்கள். நேற்று பெரும்பாலும் வன்முறையில் தி.மு.க.வினர் ஈடுபட்டனர். நீங்கள் தி.மு.க.வினரை கண்டிக்கிறீர்களா?

பதில்: சட்டசபையில் வன்முறைகள் நடந்து இருக்க கூடாது என்பதை நாங்கள் தெளிவாக எடுத்து உரைத்து இருக்கிறோம். அந்த மாதிரி வன்முறை களமாக நின்ற சட்டசபையில், ஒரு வாக்கெடுப்பு நடத்துவது என்பது அரசியல் சாசனப்படி தவறானது. இது அரசியலமைப்பு சட்டத்தில் எந்த சரத்திலும் இல்லாத ஒரு வி‌ஷயம்.

அதே போல் நாங்கள் கேட்ட 3 கோரிக்கைகளான ரகசிய வாக்கெடுப்பு, 5 நாட்கள் கழித்து வாக்கெடுப்பு, 5 நாட்களும் எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்குள் செல்ல வேண்டும் என்பன எல்லாம், சபாநாயகரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. கவர்னரும் இதை செயல்படுத்த முடியும், கோர்ட்டு மூலமாகவும் செயல்படுத்த முடியும்.

இது சபாநாயகருக்கும் தெரிந்தே இருந்தது. அந்த நேரத்தில் அவசர, அவசரமாக நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. இதை தான் கவர்னரிடம் கோரிக்கையாக எடுத்து வைத்திருக்கிறோம்.

மாற்று கருத்து கூற உரிமை உள்ளது

கேள்வி: வாக்கெடுப்பு செல்லாது என கவர்னர் சொல்லவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா?

பதில்: அடுத்தகட்ட நடவடிக்கை அதுவாகத்தான் இருக்கும். கவர்னரின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். கவர்னரின் ஏற்பாட்டால் தான் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனால் அதன் மீது மாற்று கருத்து கூற அவருக்கு உரிமை இருக்கிறது.

கேள்வி: நேற்று(நேற்று முன்தினம்) நடந்த நிகழ்வுகள் குறித்து தி.மு.க. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறுகிறார்கள். நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்? நீங்கள் என்ன முடிவு எடுக்க உள்ளீர்கள்?

பதில்: எங்களை பொறுத்தவரை ஏற்கனவே எங்கள் எம்.எல்.ஏ. 48 மணி நேரத்துக்கு முன்னதாகவே வழக்கு தொடர்ந்து இருக்கிறார். குறிப்பாக எந்த வித திறந்த வாக்கெடுப்பும் இருக்க கூடாது என்று ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம்.

ஜெயலலிதா ஆன்மா வழியில்...

கேள்வி: நீங்கள் தி.மு.க.வுடன் வைத்த கூட்டணி சட்டசபையில் வெளிப்பட்டு இருப்பதாக டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறாரே?

பதில்: அ.தி.மு.க. எந்த நிலையிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நடக்க கூடிய இயக்கம். அந்த இயக்கத்தை இம்மி கூட மாறாமல் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு செல்வார். அதில் யாருக்கும் மாற்று கருத்து வேண்டாம். எங்கள் கருத்தை நாங்கள் எடுத்துவைத்தோம். போராடினோம். அதற்கான ஆதரவை மற்ற கட்சிகளான காங்கிரஸ், தி.மு.க. போன்றவவை அவர்கள் நிலைப்பாட்டில் அவர்கள் எடுத்த முடிவு அது. எங்களை பொறுத்தவரையில் அ.தி.மு.க. ஜெயலலிதாவின் ஆன்மா வழியில் நடக்கும்.  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story