சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு


சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 19 Feb 2017 7:58 PM GMT (Updated: 19 Feb 2017 7:58 PM GMT)

சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் எம்.எல்.ஏ.க்களை மக்கள் முற்றுகையிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இதையடுத்து அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சொகுசு விடுதி

தமிழக சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காக கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா அணியை சேர்ந்த 122 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கினர். அவர்களை தொகுதிக்கு செல்ல அனுமதிக்காமல் கட்டாயப்படுத்தி சிறை வைத்ததாக தகவல் வெளியானது.

கடந்த 10 நாட்களாக கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தமிழக சட்டசபையில் நேற்றுமுன்தினம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா அணியை சேர்ந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றி பெற செய்தனர்.

சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதாக கூவத்தூர் சொகுசு விடுதியில் கடந்த 10 நாட்களாக முகாமிட்டிருந்த எம்.எல்.ஏ.க்கள் தற்போது சொந்த ஊர் நோக்கி புறப்பட்டு வருகின்றனர்.

தொகுதி மக்களுடைய கருத்துகளை கேட்காமல், தன்னிச்சையாக முடிவு எடுத்து சசிகலா அணியை ஆதரிப்பதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு சரியான பாடம் புகட்டுவோம். அவர்களை தொகுதிக்குள் நுழையவிடாமல் விரட்டியடிப்போம் என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்கள் அதிருப்தி

மக்கள் அதிருப்தி காரணமாக தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சசிகலா அணியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடைய வீடு, அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்தது. இது தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்துள்ளது. இதையடுத்து சென்னை அடையார் கிரின்வேஸ் சாலையில் உள்ள சபாநாயகர் ப.தனபால் இல்லத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


Next Story