மெரினாவில் தடையை மீறி போராட்டம்: மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு


மெரினாவில் தடையை மீறி போராட்டம்: மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 19 Feb 2017 7:59 PM GMT (Updated: 19 Feb 2017 7:59 PM GMT)

சென்னை மெரினாவில் தடையை மீறி போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

தடையை மீறி போராட்டம்

தமிழக சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டபோது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்தது. அவைக்காவலர்கள் தன்னை தாக்கியதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். பின்னர் கிழிந்த சட்டையுடன் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னரிடம் முறையிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மெரினா கடற்கரைக்கு வந்தனர். காந்திசிலை முன்பு உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. உள்பட நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். எனினும் தற்போது போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

வழக்குப்பதிவு

மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றிற்கு தடை விதித்து போலீஸ் சட்டம் 41 அமலில் இருந்து வரும் வேளையில், அதனை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் மீது மெரினா போலீசார் 143 பிரிவு(சட்டவிரோதமாக கூடுதல்), 188 பிரிவு (அரசு விதிமுறைகள் மீறுதல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல்) மற்றும் போலீஸ் சட்டம் 41 பிரிவு என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story