தி.மு.க.வின் நடவடிக்கையால் சட்டசபையின் மாண்பு பறி போய்விட்டது; நவநீதகிருஷ்ணன் எம்.பி. குற்றச்சாட்டு


தி.மு.க.வின் நடவடிக்கையால் சட்டசபையின் மாண்பு பறி போய்விட்டது; நவநீதகிருஷ்ணன் எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Feb 2017 8:00 PM GMT (Updated: 19 Feb 2017 8:00 PM GMT)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நவநீதகிருஷ்ணன் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

சென்னை,

சபாநாயகர் சொல்வதை அனைவரும் கேட்கவேண்டும், அவர் பேச்சுக்கு கட்டுப்படவேண்டும் என்பதுதான் நீதி, மரபு, விதி. ஆனால் நேற்று முன்தினம் சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும், வேண்டும் என்றே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. தி.மு.க.வின் நடவடிக்கையால் சட்டசபையின் மாண்பு பறிபோய்விட்டது. சபையின் நடவடிக்கைகளை குலைக்கவேண்டும் என்று அதனை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்தி, அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி மற்றவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற குற்ற உணர்வுடன் தி.மு.க. முன்பே திட்டமிட்டு செய்திருக்கிறது.

தி.மு.க. உறுப்பினர்கள் வேண்டும் என்றே முகாந்திரமும், அடிப்படையும் இல்லாமல் சபாநாயகரை பிடித்து தள்ளி அவருடைய இருக்கையை சேதப்படுத்தியுள்ளனர். அ.தி.மு.க.விடம் இருக்கும் வாக்குகளை விடவும் குறைவாகவே தி.மு.க.விடம் உள்ளது. இதனால் சட்டசபையை போர்க்களமாக மாற்றவேண்டும் என்ற குற்ற சதியை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே தி.மு.க.வினர் செயல்பட்டனர். சட்டசபை விதிகளில் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு எந்த வழியும் இல்லை. குரல் வாக்கெடுப்பு அல்லது ‘டிவி‌ஷன்’ வாரியாக வாக்குகள் எடுக்கலாம். இந்த 2–க்கும் மட்டும்தான் விதிகளில் வழி உள்ளது. இதேபோல பாராளுமன்றத்திலும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story