85 காலி பணியிடங்களுக்கான குரூப்–1 முதல் நிலை தேர்வை 1 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர்


85 காலி பணியிடங்களுக்கான குரூப்–1 முதல் நிலை தேர்வை 1 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர்
x
தினத்தந்தி 19 Feb 2017 8:01 PM GMT (Updated: 19 Feb 2017 8:01 PM GMT)

85 காலி பணியிடங்களுக்கான குரூப்–1 முதல் நிலை தேர்வை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 197 பேர் எழுதினர். 37 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை.

சென்னை,

முதல் நிலை தேர்வு

துணை கலெக்டர் காலி பணியிடங்கள் 29, காவல்துறை துணை கண்காணிப்பாளர் காலி பணியிடங்கள் 34, வணிகவரித்துறை துணை ஆணையாளர் காலி பணியிடங்கள் 8, மாவட்ட பதிவாளர் காலி பணியிடம் 1, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி காலி பணியிடங்கள் 5, மாவட்ட அதிகாரி(தீயணைப்பு மற்றும் மீட்பு பணி) காலி பணியிடங்கள் 8 என மொத்தம் 85 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் 9–ந் தேதி வெளியிடப்பட்டது.

அதை தொடர்ந்து 2 லட்சத்து 18 ஆயிரத்து 515 பேர் இந்த தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 742 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆண் தேர்வர்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 688 பேர், பெண் தேர்வர்கள் 99 ஆயிரத்து 82 பேர், திருநங்கைகள் 3 பேர் என மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 773 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 146 தேர்வு கூடங்களில் 43 ஆயிரத்து 836 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

63 சதவீதம் பேர் தேர்வு எழுதினர்

தமிழகம் முழுவதும் 32 தேர்வு மையங்களில், 749 தேர்வுக் கூடங்களில் குரூப்–1 முதல் நிலை தேர்வு நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 63 சதவீதம் பேர், அதாவது ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 197 பேர் பங்கேற்றனர். 37 சதவீதம் பேர்(80 ஆயிரத்து 576 பேர்) தேர்வு எழுதவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வு கூடங்களை திடீர் ஆய்வு செய்வதற்காக வருவாய் கோட்ட அதிகாரிகளை கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர, பல்வேறு அரசு துறை பணியாளர்களை கொண்டு ஒரு தேர்வுக் கூடத்துக்கு ஒருவர் வீதம் தனிப்பட்ட ஆய்வுப்பணிக்காக 749 கண்காணிப்பாளர்கள் மற்றும் 749 தேர்வு கூட ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

போதுமான நேரம் இல்லை

இந்த நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு கூடத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் க.அருள்மொழி, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.

குரூப்–1 தேர்வு குறித்து, தேர்வு எழுதியவர்கள் கூறும் போது, பொது அறிவு கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், கணக்கு மற்றும் அறிவியல் பாட கேள்விகள் சற்று சிரமமாக இருந்ததாகவும், மொத்தத்தில் தேர்வு எழுதுவதற்கு போதுமான நேரம் இல்லை என்றும் தெரிவித்தனர்.


Next Story