தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Feb 2017 4:45 PM GMT (Updated: 20 Feb 2017 1:12 PM GMT)

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தொடர்ந்து பெண்களும், சிறுமிகளும் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்படும் சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், எண்ணூர் மீனவக்குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட சிறுமி ரித்திகா வீட்டுக்கு சென்று, ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மிகப்பெரிய கொடுமை நடக்கிறது

எண்ணூர் பகுதியில் ரித்திகா என்ற 3 வயது சிறுமி கொடூரமான முறையிலே கொலை செய்யப்பட்டார். அந்தக் குழந்தையின் குடும்பத்தை நேரிலே சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக வந்திருக்கின்றோம். இந்த ஆட்சியிலே சட்டம்–ஒழுங்கு எந்தளவிற்கு ஒரு மோசமான நிலையில் இருக்கின்றது என்பதற்கு இவைகளெல்லாம் இன்றைக்கு சாட்சிகளாக இருந்து கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதையும் தாண்டி சொல்ல வேண்டுமென சொன்னால் சிறுமிகளுக்கு இன்றைக்கு மிகப்பெரிய கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது.

உதாரணமாக அரியலூர் பகுதியிலே நந்தினி என்ற பெண் கற்பழிக்கப்பட்டு அந்த கருவை சிதைத்து கொலை செய்திருக்கும் கொடுமை நடந்திருக்கின்றது, அதைத்தொடர்ந்து போரூரிலே ஹாசினி என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட கொடுமை, இப்பொழுது எண்ணூர் பகுதியிலே 3 வயது சிறுமி ரித்திகா கொடுமையான முறையிலே கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இந்த கொடுமைகளை எல்லாம் தட்டி கேட்பதற்கு, சட்டம்–ஒழுங்கு பேணி பாதுகாக்கும் நிலையில் இருக்கும் காவல்துறை கூவத்தூரில் பாதுகாப்பு தரும் நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

அதேபோல தலைமைச் செயலகத்திலே அவர்கள் வாக்கெடுப்பை நிறைவேற்றிக் கொள்ள அடியாட்களை வைத்து எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திற்குள் அடித்து வெளியில் தூக்கிப் போடுவதற்கு தான் காவல்துறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர, பெண்களுக்கு பாதுகாப்பு தருகின்ற நிலையில் இந்தக் காவல்துறை இல்லை என்பது இந்த ஆட்சியில் வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் நிருபர்கள், முதல்–அமைச்சர் 5 திட்டங்களுக்கு கோப்புகளில் கையெழுத்து போட்டிருக்கிறார். முக்கியமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவு போட்டிருக்கிறாரே? இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், ‘அவர் எத்தனை கையெழுத்து வேண்டுமென்றாலும் போடட்டும். நான் கேட்பது இதுபோன்ற சிறுமிகள் பாதுகாப்பில், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பிற்காக பல அம்ச திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார். இப்பொழுது அவர் என்னதான் கோப்புகளில் கையெழுத்து போட்டு கொண்டிருந்தாலும் தொடர்ந்து பெண்கள், சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்படும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. இதை தடுக்கும் முயற்சியிலே சசிகலாவின் பினாமி முதல்–அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஈடுபட வேண்டும்’ என்றார்.


Next Story