மே 15–ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்; ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்


மே 15–ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்; ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 20 Feb 2017 5:15 PM GMT (Updated: 20 Feb 2017 1:54 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் வருகிற மே 15–ந் தேதிக்குள் நடத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில், மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார்.

சென்னை,

தேர்தல் ரத்து

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடக்க இருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை முறையாக பின்பற்றி பிறப்பிக்கப்படவில்லை. எனவே, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதாக’ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.

மேலும், புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

எண்ணம் இல்லையா?

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு கடந்த வாரம் ஐகோர்ட்டு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு இல்லையா? ஏன் இந்த வழக்கை இழுத்தடிக்கிறீர்கள்?’ என்று தேர்தல் ஆணையத்தின் வக்கீலிடம் சரமாரியாக கேள்வி கேட்டு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தெளிவான தேதி

தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆஜராகி, ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்த போகிறீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்’ என்றனர். அதற்கு மூத்த வக்கீல், ‘தேர்தல் பணி தொடர்பான பயிற்சிகளை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டியதுள்ளது. அதனால், தேர்தல் வருகிற மே 15–ந் தேதிக்குள் நடத்தப்படும்’ என்றார்.

‘ஏன் இவ்வளவு காலதாமதம் செய்கிறீர்கள்? மே 15–ந் தேதிக்குள் என்று கூறுவதை எங்களால் ஏற்கமுடியாது. தேர்தல் இந்த தேதியில் நடத்தப்படும் என்று தெளிவான பதிலை தெரிவிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் கூறினார்கள். பின்னர், இந்த வழக்கு நாளை (அதாவது இன்று) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story