எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை - மு.க. ஸ்டாலின்


எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை - மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 20 Feb 2017 2:50 PM GMT (Updated: 20 Feb 2017 2:50 PM GMT)

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிஉள்ளார்.

சென்னை,

 தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த நிகழ்வுகளை கண்டித்து திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முறையான அறிக்கையானது தாக்கல் செய்யப்படவில்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்த பின்னர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்று மருத்துவமனை அறிக்கை அனுப்பியது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஜெயலலிதா மறைவு செய்தியை வெளியிட்டனர். ஆளுநர் மாளிகைக்கு ஒரு பேருந்தில் சென்ற அதிமுக அமைச்சரவை அன்றைய நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டது.

அதற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் தன் பதவியை ராஜினாமா செய்தார். திடீரென்று ஒரு நாள் பொறுப்பு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த பிறகு வலுக்கட்டாயமாக என்னை ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்றார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது, அதனை நிவர்த்தி செய்யவேண்டிய பொறுப்பு இருப்பதால் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றார். சசிகலா குடும்பம் குறித்து 10 சதவிதம் மட்டும்தான் கூறினேன். 90சதவிதம் இன்னும் உள்ளது என்றார். அதற்குப் பிறகு கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்துவைக்கப்பட்டனர். 

இந்த நிலையில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் எங்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆளுநர் எடப்பாடி பழனிசாமி 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றார். ஆனால் 48 மணிநேரத்துக்குள் சட்டப்பேரவை கூடுவதாக செயலாளர் ஜமாலுதீன் அறிவித்தார். கூவத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டனர். 18-ம் தேதி சட்டப்பேரவை கூடியது. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் செம்மலை, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் ரகசிய வாக்கெடுப்பு கோரினர்.

செம்மலை பேசுகையில் ''நான் கூவத்தூரில் இருந்த அறை சாவி இது என எடுத்துக்காட்டினார். இங்கே அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அச்சத்தோடு உள்ளதால் வேறு ஒருநாளில் வாக்கெடுப்பு நடத்தலாம் அல்லது ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம். எம்.எல்.ஏக்களின் பாதுகாப்பு முக்கியம்'' என்றார். நானும் எம்.எல்.ஏக்களுக்கு சுதந்திரம் தேவை. எனவே அவர்கள் தொகுதிக்கு சென்று மக்கள் கருத்தைக் கேட்டு வாக்கெடுப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும் என்பதால் ஒரு வாரத்துக்கு வாக்கெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றேன்.

அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, சபாநாயகர் அழைத்து என் சட்டையை திமுக உறுப்பினர் கிழித்துவிட்டார். இது நியாயமா? என்று கேட்டார்.
நியாயம் இல்லை. அதை திமுகவினர் செய்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றேன். வாக்கெடுப்பை ஒத்திவைக்கக் கோரிய போது முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். மீண்டும் அவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எங்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றியது மரபு இல்லை. அப்படி வெளியேற்ற முடியாது. அதுகுறித்து சபாநாயகருக்கு கடிதம் எழுதி அளித்தோம். 
ஆனால், எதிர்க்கட்சி இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது ஜனநாயகப் படுகொலை என்பதை வலியுறுத்தி மெரினா - காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டோம். 

குடியரசுத் தலைவரிடம் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விளக்க நேரம் கேட்டுள்ளோம். வரும் 22-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அறப்போராட்டம் நடத்த உள்ளோம். இது தொடர் போராட்டமாக நடைபெறும். இது திமுகவின் பிரச்சினை என்று மட்டும் கருதிவிடக் கூடாது. மக்கள் பிரச்சினை.

தமிழகத்தில் இப்போது அமைந்து உள்ள அரசை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் சசிகலாவிற்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்களை அவர்களுடைய தொகுதிகளுக்குள் அனுமதிப்பது கிடையாது. இதுதொடர்பான காட்சிகளை தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறோம். மக்கள் இப்போது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்கு சசிகலாதான் காரணம் என மக்கள் எண்ணத்தில் பதிவாகிஉள்ளது. ஜெயலலிதா ஆட்சியின் போதும் மன்னார் குடி மாபியா கும்பல் ஆட்டம் ஆடியது. அவர்கள் இனி வரக்கூடாது என மக்கள் விரும்புகிறார். இப்போது தமிழக மக்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரிடமும் கேட்டுக் கொள்வது, நடைபெற உள்ள போராட்டம், கட்சியின் சார்பில் கிடையாது. நாட்டை காப்பாற்ற, தமிழகத்தை காப்பாற்ற தமிழக மக்கள் ஆட்சியைத் தூக்கியெறிய 22-ம் தேதி போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய ஆதரவு தர வேண்டும். 

ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கலாம். தமிழகத்தை காப்பாற்ற உடனடியாக அறப்போரட்டத்தை நடத்த வேண்டும். அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும். திருச்சி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நான் தலைமை ஏற்கிறேன் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின், சசிகலாவின் பினாமி ஆட்சியில் கோடி, கோடியாக கொள்ளையடிக்கிறார்கள். மீண்டும் கொள்ளையடிக்கும் நடவடிக்கையாக ஆட்சியை ஏற்று கொண்டு உள்ளனர். சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக்க வேண்டும். பேரவையில் நடந்தவற்றை அப்படியே ஒளிபரப்பாமல், வெட்டப்பட்ட காட்சிகளே ஒளிபரப்பப்படுகின்றன என்றார். 


Next Story