தி.மு.க. நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒட்டு மொத்த மக்களும் ஆதரவு தர வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி


தி.மு.க. நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒட்டு மொத்த மக்களும் ஆதரவு தர வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 20 Feb 2017 10:15 PM GMT (Updated: 20 Feb 2017 7:02 PM GMT)

தி.மு.க. நடத்தும் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஒட்டு மொத்த மக்களும் ஆதரவு தர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சட்டசபையில் நடந்தது என்ன?

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவை மீதான நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தபோது, மறைமுக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது அவையை ஒத்திவைத்து ஒரு வாரம் கழித்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் தி.மு.க. உறுப்பினர்களே வெளியேறுங்கள் என்று கூறி சபாநாயகர் வெளியே சென்று விட்டார். பொதுவாக சட்டசபையில் இருந்து ஒட்டு மொத்தமாக யாரையும் வெளியேற்றக் கூடாது. பெயரை சொல்லி அவர்களை மட்டும் தான் வெளியேற்ற வேண்டும். அது தான் விதிமுறை. ஆனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்றினர்.

அவை ஒத்தி வைக்கப்பட்ட நேரத்தில் பகல் 2.30 மணிக்கு போலீஸ் சூப்பிரண்டு அளவில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் தங்கள் உடைகளை மாற்றி, அவைக்காவலர்கள் உடையில் அவைக்குள் வந்து, எங்களை வெளியேற்றினர். கடுமையாக தாக்கினார்கள். இதில் எல்லோருக்கும் காயம் ஏற்பட்டது.

நாங்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அங்கே வாக்கெடுப்பை நடத்தி விட்டார்கள். ஜனநாயக படுகொலையை கண்டித்து காந்தி சிலை அருகில் அமைதி வழியில் அறவழி போராட்டத்தை நடத்தினோம். மாணவர்கள், பொதுமக்கள் ஆதரவு அளித்தனர். ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். போலீசார் எங்களை கட்டாயப்படுத்தி கைது செய்தனர்.

போராட்டம்

22–ந் தேதி (நாளை) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம். இதற்கு பிறகும் நியாயம் கிடைக்காவிட்டால், தொடர் போராட்டம் நடத்த இருக்கிறோம். இது ஒட்டு மொத்த மக்களின் போராட்டம்.

சசிகலாவின் பினாமி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு ஆதரவு கொடுத்து இருக்கிற எம்.எல்.ஏ.க்கள் இன்றைக்கு தொகுதி பக்கம் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு சசிகலாவும், அவரது குடும்பமும் தான் காரணம் என்று என்று மக்கள் நினைக்கிறார்கள்.

ஆதரவு தர வேண்டும்

இந்தநிலையில், தமிழக இளைஞர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்பட ஒட்டு மொத்த தமிழர்களை கேட்டுக் கொள்ள விரும்புவது இந்த நாட்டை காப்பாற்ற தமிழகத்தை காப்பாற்ற, தமிழக மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறியும் வகையில், நாங்கள் நடத்தும் மிகப்பெரிய அறப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். திருச்சியில் நான் பங்கேற்கிறேன். காஞ்சீபுரத்தில் துரைமுருகன் கலந்து கொள்கிறார்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:–மணல் குவாரி தொடர்பாக முதல்–அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது எழுந்து சென்று விட்டார்? இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: சசிகலாவின் பினாமி ஆட்சி அப்படித் தான் இருக்கும். பதவி வெறி பிடித்து, கொள்ளையடிக்கும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். நானும் டி.வி.யில் பார்த்தேன். ஜெயலலிதாவை போல் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். மணல் குவாரிகளை அரசே நடத்தும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தோம்.

கேள்வி:–சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் காட்சி பதிவுகளாக ஒரு தலைப்பட்சமாக ‘எடிட்’ செய்யப்பட்டதாக நினைக்கிறீர்களா?

பதில்:– அவர்களே ‘எடிட்’ செய்து, சேர்க்க வேண்டியதை சேர்த்து, அனுப்பியிருக்கிறார்கள். இதற்கு தான் நாங்கள் நேரடி ஒளிப்பரப்பு கேட்கிறோம். அவ்வாறு செய்திருந்தால் உண்மை வெளியே வந்திருக்கும். வாக்களிப்பதற்காக பணம், நகை வாங்கியிருக்கிறார்கள் என்று செய்தி வந்தது. அதனால் தான் அவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமைதியாக இருந்தார்கள். அவைக்காவலர்களை வைத்து எங்களை அடித்து, வெளியேற்றினார்கள்.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

கேள்வி:–தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுமா?

பதில்:–கருத்து ஒற்றுமையுள்ள கட்சிகள் ஆதரவு கொடுக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறோம்.

கேள்வி:–ரகசிய வாக்கெடுப்பு நடந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருப்பாரா?

பதில்:–ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருந்தால் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருக்க முடியாது. இங்கு நடந்த சம்பவம் தொடர்பாக கோர்ட்டில் நாங்கள் வழக்கு தொடுத்து இருக்கிறோம்.

கேள்வி:–சபாநாயகரின் குற்றச்சாட்டு குறித்து?

பதில்:–சபாநாயகரின் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது. இது மக்கள் மத்தியில் எடுபடாது. அவர்கள் மீதான பழியை துடைக்க, பிரச்சினையை திசை திருப்புவதற்காக செய்கிறார். சபாநாயகர் மீது நாங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவோம்.

கமல்ஹாசன் கருத்து

கேள்வி:–சசிகலா சென்னை சிறைக்கு மாற்றப்பட்டால் என்ன செய்வீர்கள்?

பதில்:–இது கோர்ட்டு எடுக்க வேண்டிய முடிவு. நாங்கள் சட்டப்படி செய்ய வேண்டியதை செய்வோம்.

கேள்வி:–திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உங்களை விமர்சனம் செய்து இருக்கிறாரே?

பதில்:–அவரை நான் மதிக்கிறேன். அவருடைய கேள்விக்கு பதில் அளித்து அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதையை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை.

கேள்வி:–தி.மு.க. தலைவர் கருணாநிதி எப்படி இருக்கிறார்?

பதில்:–வயது முதிர்வு காரணமாக அவருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அதில் இருந்து மீண்டு கொண்டு இருக்கிறார். பேசுவதற்கு பயிற்சி எடுக்கிறார்.

கேள்வி:–தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறாரே?

பதில்:–மக்களுடைய எண்ணமும் அதுதான். எல்லோருக்கும் அதே எண்ணம் தான் இருக்கிறது. அந்த நிலையை நோக்கி தான் நாங்களும் சென்று கொண்டிருக்கிறோம்.

சசிகலா சபதம்

கேள்வி:–ஆரம்பத்தில் இருந்து அ.தி.மு.க.வை எதிர்த்து வந்த சுப்பிரமணியசாமி இப்போது ஆதரிக்கிறாரே?

பதில்:–சொத்துக்குவிப்பு வழக்கை தொடங்கியதே அவர் தான். இப்போது ஆதரிக்கிறார் என்றால், நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

கேள்வி:–சசிகலா, ஜெயலலிதா சமாதியில் எடுத்த சபதம் பற்றி?

பதில்:–4 ஆண்டு தண்டனை வாங்கி செல்கிறார். ஆத்திரத்தின் விழிப்பில் இருக்கிறார். முதல்–அமைச்சராக வர வேண்டிய சூழ்நிலையில் இருந்தவர், அந்த நேரத்தில் இந்த தீர்ப்பு வந்து விட்டது. ஜெயிலில் முதல்வகுப்பு கிடைக்கவில்லை என்ற எண்ணம். இதை எல்லாம் பார்க்கும்போது ஜெயலலிதாவின் மரணத்திற்கு கூட விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

உள்காயம்

கேள்வி:–தமிழக அரசை, மத்திய அரசு ஊக்குவிக்கிறதா?

பதில்:–மத்திய அரசு உடந்தையாக இருக்கிறதா? ஊக்குவிக்கிறதா? என்பது போக போகத்தான் தெரியும்.

கேள்வி:–கருணாநிதி–ஜெயலலிதா மிகப்பெரிய அரசியல் சக்தியாக இருந்தவர்கள். தற்போது உங்களுக்கு போட்டியாளராக யாரை நினைக்கிறீர்கள்?

பதில்:–எனக்கு போட்டியாளர் யாரும் இல்லை. யாரையும் நான் போட்டியாளராக நினைக்கவில்லை.

கேள்வி:–அ.தி.மு.க. இரண்டாக உடைந்த நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்?

பதில்:–இது அவர்கள் கட்சி பிரச்சினை.

கேள்வி:–சட்டசபையில் நடந்த நிகழ்வின் போது உங்கள் எம்.எல்.ஏ.க்களும், நீங்களும் தாக்கப்பட்டீர்கள்? உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது?

பதில்:–வெளியில் காயம் இல்லை. உள்காயம் உள்ளது. ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும். வலி இருக்கிறது.

நீடிக்க கூடாது

கேள்வி:–இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:–இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது. குற்றவாளி இந்த ஆட்சியை நடத்த கூடாது.

கேள்வி:–உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:–உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story